பொன்விழாவை சிறப்பாக கொண்டாடிய கதிரவன் கலைக்கழகம்

( வி.ரி.சகாதேவராஜா)

கதிரவன் கலைக்கழகம் நேற்று 27/09/2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் மட்டக்களப்பு ‘ஈஸ்ட் லகூன் ஹோட்டலில்” பொன்விழாவைக் கொண்டாடியது.

28.04.1976 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் கலாபூஷணம், கிராமியக் கலைஞர்
சி.தங்கராசா தலைமையில் இளைஞர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பெற்றது இக் கழகம்.

கதிரவன் கலைக்கழகத் தலைவர் கதிரவன் த. இன்பராசா தலைமையில் நடைபெற உள்ள இப் பொன்விழா “ஊரிலிருந்து உலகம் வரை” எனும் தொனிப் பொருளில் ‘வாழும் தமிழ் வாழ்க’ எனும் மகுட வாசகத்தின் கீழ் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

கதிரவன் முன்னேற்றத்திற்காக ஆதரவு வழங்கி , தொடர் சமூக செயற்பாட்டில் உள்ள ஐம்பது பேராளர்கள் இவ்விழாவின்போது ‘கதிரவன் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டதும், 50 ஆண்டுகால செயற்பாடுகளை உள்ளடக்கிய ஆவணமாக ‘ஊரிலிருந்து உலகம்வரை’ எனும் நூல் வெளியீடும் இந்நிகழ்வின் பிரதான அம்சமாகும்.

இலங்கையின் பல பாகங்களில் இருந்தும், இந்தியா மற்றும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் விருந்தினர்கள் பங்கேற்கும் இப் பொன்விழா பண்பாட்டுப் பவனியுடன் ஆரம்பமாகி, இனிப்புப் பகிர்ந்து, ஆரம்பகால உறுப்பினர்கள் முதல் இக்கால உறுப்பினர்கள் வரை ஒன்றிணைந்து பிரமாண்டமாக கொண்டாடினர்.

அரச அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள், சமூக- சமய தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலபேர் சிறப்பு விருந்தினர்களாக இந்நிகழ்வில் பங்கு பெற்றவுள்ளனர்.

1976 ஆம் ஆண்டு கிராமியக் கலைகளோடு ஆரம்பமாகிய இக்கழகம், காலப்போக்கில் சமூக, புரான, மற்றும் இதிகாச நாடகங்களை மேடை ஏற்றி சமூக, ஆன்மீக, மற்றும் கல்விப் பணி என்று நகர்ந்து வீதி நாடகம், கதிரவன் சஞ்சிகை வெளியீடு பட்டிமன்றம் என உருவாகி இன்று ஊரிலிருந்து உலகம் வரை பல்வேறு நற்பணிகளை முன்னெடுக்கும் சமூக நிறுவனமாக மாற்றம் பெற்றுள்ளது.

இலங்கையிலும், இந்தியாவிலும் 188 பட்டிமன்றங்களை நிகழ்த்தியும், இதுவரை 2500 இற்கும் மேற்பட்ட வீதி நாடகங்களை ஆற்றுகை செய்தும், நூல் வெளியீடுகள் கலை நிகழ்வுகள் என பல்வேறுபட்ட நிகழ்வுகளை நடத்தியும், சர்வதேச தினங்களை பிரகடனப்படுத்தும் நிகழ்வுகளுக்கு முன்னுரிமை வழங்கியும் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்த கழகமாக கதிரவன் கலைக்கழகம் காணப்படுகின்றது.

இவ்வருடம் 50 ஆவது ஆண்டை சிறப்பித்து 50 நிகழ்வுகளை இந்தியாவிலும், இலங்கையிலும் ஒழுங்குப்படுத்தி நடத்தி நேற்று நடந்த ஐம்பதாவது விழாவே பொன் விழாவாக கருதப்படுகின்றது.