(வி.ரி. சகாதேவராஜா)
திருகோணமலை கன்னியா ஆத்ம யோக ஞான சபாவில் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் 19வது சமாதி தினத்தை முன்னிட்டு விசேட அபிஷேக பூஜை நேற்று (24) வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சிறப்பாக இடம்பெற்றது.
கும்பாபிஷேகத்தின் பின்னர் இடம்பெற்ற முதலாவது குரு சமாதி தினம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆத்ம யோக ஞான சபாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு குருவருள் பெற்றனர்.
இதன்போது சுவாமிகளின் திருவுருவப் படத்திற்கு விசேட அபிஷேகம், அர்ச்சனை மற்றும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகள் இடம்பெற்றன. தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.
காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகள் கன்னியா வெந்நீரூற்று பகுதியை ஆன்மீக தலமாக மாற்றிய பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஆத்ம ஞான போதனைகள் இன்றும் பலருக்கு வழிகாட்டியாக திகழ்கின்றன.
இந்நிகழ்வில் சபாவின் நிர்வாகிகள், பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


