மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனின் விடுதலைக்கு ஜம்இய்யதுல் உலமா முழு ஆதரவு!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவின் விடுதலைக்குத் தேவையான முழுமையான ஆதரவை வழங்குவதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் உறுதி அளித்துள்ளார்.

சவூதி அரேபிய இராச்சியத்தின் 96ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு, கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு வரவேற்பு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்தின் பொறுப்பதிகாரி யாசர் அப்துல்ரஹ்மான் அல்-ஹஸ்மி (H.E. Yaser Abdulrahman Al-Hazme) அவர்களின் அழைப்பின் பேரில், இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ சாணக்கியன் இராசமாணிக்கம் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வின் இடையே, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போதே, சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டு நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கை இளைஞன் அனோஜனின் விடுதலை தொடர்பான சட்ட மற்றும் தூதரக ரீதியான முயற்சிகளுக்குத் தமது அமைப்பு முழுமையான ஆதரவை வழங்கும் என ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் உறுதியளித்தார்.

அத்துடன், சவூதி அரேபிய இராச்சியத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கும், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். MP சாணக்கியன் வழக்கமாக இந்நிகழ்வில் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.