உள்ளூராட்சி மன்றங்கள் என்பது வெறுமனே குப்பைகளை அகற்றுவதற்கும் அடிப்படைச் சேவைகளை வழங்குவதற்குமான நிறுவனங்கள் அல்ல; அவை மக்களால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட சட்டவாக்க மற்றும் நிர்வாகப் பொறுப்புமிக்க நிறுவனங்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் பொது நிர்வாக அமைச்சரிடம் கேள்விகளை எழுப்பியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நிதி நெருக்கடிகள், எல்லை மீறிய வரி வசூல், முடங்கிக்கடக்கும் உபசட்டங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் அதிகாரப் புறக்கணிப்பு தொடர்பில் அவர் சுட்டிக்காட்டிய முக்கிய அம்சங்கள் வருமாறு:
1. எல்லை மீறும் வரி வசூலுக்கு உடனடித் தடை தேவை
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் வட்டாரத்தில், அயலிலுள்ள காத்தான்குடி நகர சபை தன்னிச்சையாக வந்து சொத்து வரிகள் மற்றும் கட்டணங்களை வசூலிப்பதாக சாணக்கியன் எம்.பி. குற்றம்சாட்டினார்.
“ஒரு உள்ளூராட்சி மன்றத்தின் நிர்வாக எல்லைக்குள் மற்றொரு சபை தன்னிச்சையாக வரி வசூலிப்பது நிர்வாகக் குழப்பத்தையும், இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளையும் தோற்றுவிக்கும். இத்தகைய எல்லை மீறிய நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாகத் தடுக்க வேண்டும்.”
2. நிதி நெருக்கடியும் IMF நிபந்தனை குறித்த விளக்கமும்
உள்ளூராட்சி மன்றங்கள் தமது சொந்த வருமானத்திலிருந்தே ஊழியர்களுக்கான சம்பளத்தைச் செலுத்த வேண்டிய நிலை உருவாக்கப்பட்டு வருவதாகவும், 2029 ஆம் ஆண்டளவில் 100% சம்பளத்தையும் சபைகளே ஏற்க வேண்டும் எனக் கூறப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனை எனக் கூறப்பட்டாலும், அது உண்மையல்ல எனக் குறிப்பிட்ட அவர், போதிய வருமான வழிமுறைகள் இல்லாத சிறிய உள்ளூராட்சி மன்றங்கள் இவ்வாறான நடைமுறையால் எதிர்காலத்தில் இயங்க முடியாமல் முடங்கிவிடும் என எச்சரித்தார்.
3. புதுப்பிக்கப்படாத அபராதங்களும் முடங்கியுள்ள உபசட்டங்களும்
காலாவதியான கட்டணங்கள்: பல வருடங்களாக உரிமக் கட்டணங்களும் (ரூ. 5,000 – 6,000) அபராதத் தொகைகளும் (ரூ. 100, 150) புதுப்பிக்கப்படாமல் இருப்பதால், விதிமுறைகளை மீறுபவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது. தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப இவை மீளாய்வு செய்யப்பட வேண்டும்.
அங்கீகாரமற்ற உபசட்டங்கள்: 2017 முதல் மாகாண சபைகள் செயற்பாட்டில் இல்லாததால், 2018 இலிருந்து மாநகர மற்றும் பிரதேச சபைகளால் இயற்றப்பட்ட பல உபசட்டங்கள் ஆளுநரின் ஒப்புதல் இன்றி நடைமுறைக்கு வராமல் முடங்கிக் கிடக்கின்றன.
4. ‘பிரஜாசக்தி’ அமைப்புகளின் தலையீடும் மக்கள் பிரதிநிதிகளின் உரிமையும்
மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் மாநகர மேயர்கள் மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள் பங்கேற்பதில் ஏற்படுத்தப்படும் கட்டுப்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பிய அவர், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைப் புறக்கணித்துவிட்டு ‘பிரஜாசக்தி’ போன்ற குழுக்களுக்கு அபிவிருத்திப் பணிகளில் முன்னுரிமை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்.
5. அபிவிருத்தி நிதியும் LLDF கடன் திட்டங்களும்
வெளிப்படைத்தன்மை: 2025–2026 ஆம் ஆண்டுகளுக்கான மத்திய மற்றும் மாகாண அபிவிருத்தி நிதிகள், வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் வடக்கு-கிழக்கு சபைகளுக்கு எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டன என்ற விபரங்கள் வெளியிடப்பட வேண்டும்.
LLDF திட்டங்கள்: உள்ளூராட்சி மன்றங்கள் தமது வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள சமர்ப்பித்துள்ள LLDF (Local Authorities Loans Development Fund) கடன் திட்ட முன்மொழிவுகளுக்கு உடனடியாக அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.
தரம் உயர்த்துதல்: மக்கள் தொகை மற்றும் நகரமயமாக்கலுக்கு ஏற்ப வடக்கு-கிழக்கிலுள்ள சில பிரதேச சபைகளை நகர சபைகளாகவும், நகர சபைகளை மாநகர சபைகளாகவும் தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உள்ளூராட்சி மன்றங்களின் சட்டவாக்க, நிர்வாக மற்றும் நிதி சுயாதீனத்தை அரசாங்கம் உடனடியாகப் பாதுகாத்து வலுப்படுத்த வேண்டும் என சாணக்கியன் இராசமாணிக்கம் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.


