மதங்களின் பெயரால் நடைபெறும் அத்துமீறல்களை அனுமதிக்க முடியாது -ஈரோஸ் ஜனநாயக முன்னணி

மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது என ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச்செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்

கடந்த வெள்ளிக்கிழமை வலப்பணை மல்லியப்பூ தோட்ட முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் சிலர் புத்தர் சிலையொன்றை இரவோடு இரவாக நிர்மாணிக்க முற்பட்டபோது இரண்டு தரப்புக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

எதிர்காலத்தில் புத்தரின் பெயரில் மட்டும் அல்ல எந்த கடவுளின் பெயராலும் இனங்களுக்கிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் இதுபோன்ற செயற்பாடுகளை அரசாங்கம் தடுத்துநிறுத்துவதற்கு இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்

குறிப்பிட்ட இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் பெளத்த வழிப்பாட்டு தலம் இருக்கும் போது முத்துமாரியம்மன் ஆலயத்தில் கோயில் நிருவாகத்தின் அனுமதியும் பெற்றுக்கொள்ளாமல் அத்துமீறிய இந்த செயற்பாடுகள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

இதுபோன்று வடபகுதியில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தேவைக்கு மேலதிகமா புத்தர் சிலை வைப்பும் பெளத்த வழிப்பாட்டுத்தளங்கள் நிர்மாணிப்பும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்பட்டிருப்பதோடு பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஆகவே இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயற்பாடுகள் தொடர்வதை அனுமதிக்கமுடியாது எனவே பொது இடங்களில் மதசின்னங்களை நிறுவுதல், வழிப்பாட்டு தலங்கள் நிறுவுதல் தொடர்பில்,  மக்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு பாதிப்பேற்படாத வகையில் பொதுக் கொள்கை ஒன்று உருவாக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.