எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
அறிவையும் பண்பாட்டையும் இணைத்த பன்னாட்டுத் தமிழியல் முன்னெடுப்பு
செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் மாற்றங்கள் உலகின் அனைத்துத் துறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் சமகாலச் சூழலில், செம்மொழித் தமிழின் தொன்மையையும் அதன் அறிவுசார் வளத்தையும் நவீன உலகின் தேவைகளுடன் இணைத்துச் சிந்திக்கும் நோக்கில், உலகத் தமிழாய்வு மாநாடு 2026 கனடாவின் டொராண்டோ நகரில் சிறப்பாக நடைபெற்றது.
அனைத்துலகத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில், ஒக்டோபர் 15 முதல் 18 வரை நான்கு நாட்கள் நடைபெற்ற இம்மாநாடு, உலகெங்கும் வாழும் தமிழறிஞர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், தொழில்துறை வல்லுநர்கள், கலைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினரை ஒரே அறிவுசார் தளத்தில் ஒன்றிணைத்த ஒரு முக்கியமான பன்னாட்டு நிகழ்வாக அமைந்தது.
“செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இம்மாநாடு, தமிழ்மொழியின் தொன்மையையும் அதன் இலக்கிய, இலக்கண, பண்பாட்டு மற்றும் வரலாற்றுச் சிறப்புகளையும் பாதுகாப்பதுடன், அவற்றை நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகளுடன் இணைத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் மொழி, கல்வி, பொருளாதாரம், சமூக உறவுகள் மற்றும் மனித வாழ்வில் ஏற்படுகின்ற மாற்றங்களைத் தமிழ்ச் சமூகத்தின் நோக்கில் ஆராய்வதற்கான விரிவான வாய்ப்பினை இம்மாநாடு ஏற்படுத்தியது.
அனைத்துலகத் தமிழர் பேரவையின் தலைவர் நிமல் விநாயகமூர்த்தி தலைமையில் மாநாட்டின் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தியா, இலங்கை, மலேசியா, ஐக்கிய இராட்சியம், நோர்வே, கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ்ப் பற்றாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பங்களிப்புடன் மாநாட்டின் திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் செயலாக்கப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மாநாட்டின் வழிநடத்தல் குழு, விழாக்குழு மற்றும் ஆய்வுக் குழுவினரின் ஒருங்கிணைந்த பங்களிப்பு இந்நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு வலுச்சேர்த்தது. குறிப்பாக, பன்னாட்டுத் தமிழறிஞர்களைக் கொண்ட ஆய்வுக் குழுவின் வழிகாட்டுதலில் ஆய்வுக் கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, துல்லியமாக மதிப்புரை செய்யப்பட்டு, அவற்றுக்கான அமர்வுகள் முறையாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை மாநாட்டின் கல்விசார் தரத்தை எடுத்துக்காட்டியது.
இம்மாநாட்டில் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் பங்கேற்பு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெற்றிருந்தது. குறிப்பாக, இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகம் உட்பட பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டமை, இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் கல்வி மற்றும் ஆய்வுத்துறைப் பங்களிப்பை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தும் வாய்ப்பாக அமைந்தது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சார்பில் மூன்று கல்வியாளர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். மேலும், கொழும்புப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட இலங்கையின் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த கல்வியாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலைமைகள் தொடர்பான ஆய்வுகளுக்கும் இம்மாநாடு முக்கியமான களமாக அமைந்தது.
குறிப்பாக, பிராந்திய அபிவிருத்தி, வறுமைக் குறைப்பு, வாழ்வாதார மேம்பாடு, தொழில்முனைவோர் வளர்ச்சி, கல்வி வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்பப் பயன்பாடு போன்ற விடயங்களில் சர்வதேச அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
இம்மாநாட்டில் இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விவசாயத்துறை பீடாதிபதி பேராசிரியர் மு. சுகிர்தரன், கலை கலாசார முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் வ. குணபாலசிங்கம் பொருளியல் துறை பேராசிரியர் ஜெயப்பிரபா சுரேஸ், மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக சிரேஸ்ர விரிவுரையாளர் கலாநிதி டிலக்ஸி மரியான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
அதேபோன்று, கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து சிரேஸ்ர பேராசிரியர் க. அமிர்தலிங்கம், வவுனியா பல்கலைக்கழகத்திலிருந்து முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் த. மங்களேஸ்வரன் மற்றும் கலாநிதி ந. ரவீந்திரகுமாரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியர் சிவாணி சண்முகதாஸ் உள்ளிட்ட பல பேராசிரியர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
அந்தவகையில் இலங்கையின் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த கல்வியாளர்களின் பங்கேற்பு இலங்கையின் கல்விசார் சமூகத்திற்கும் பன்னாட்டுத் தமிழறிஞர்களுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தியது.
சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் அறிஞர்களுடன் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், அவர்களின் ஆய்வு அணுகுமுறைகள் மற்றும் அனுபவங்களை அறிந்துகொள்ளவும், எதிர்கால ஆய்வுக் கூட்டிணைவுகளுக்கான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் இம்மாநாடு சிறந்த வாய்ப்பினை வழங்கியது. குறிப்பாக, பொருளியல், சமூக மேம்பாடு, பிராந்திய அபிவிருத்தி மற்றும் புலம்பெயர் தமிழர்களின் பொருளாதாரப் பங்களிப்பு தொடர்பான விவாதங்கள் எனது கல்விசார் ஆர்வத்துடன் நெருங்கிய தொடர்புடையவையாக அமைந்தன. இத்தகைய சர்வதேச அறிவுசார் நிகழ்வுகளில் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் கல்வியாளர்கள் தொடர்ச்சியாகப் பங்கேற்பது, அவர்களின் ஆய்வுத் திறன்களை மேம்படுத்துவதோடு, இலங்கையின் உயர்கல்வித் துறையை உலகளாவிய கல்விசார் வலைப்பின்னல்களுடன் இணைப்பதற்கும் உதவும். குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளைச் சர்வதேச ஆய்வுத் தளங்களில் முன்வைத்து, அவற்றுக்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளைத் தேடுவதற்கு இத்தகைய வாய்ப்புகள் பெரிதும் துணைபுரியும்.
“தமிழ் என்பது கடந்தகாலத்தின் பெருமை மட்டுமல்ல. எதிர்கால உலகில் அறிவாலும் தொழில்நுட்பத்தாலும் தொடர்ந்து வளர்ச்சியடைய வேண்டிய உயிர்மொழியாகும்.”
அந்த உயரிய நோக்கத்தை முன்னிறுத்தி நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2026, உலகத் தமிழர்களின் அறிவுசார் ஒருங்கிணைப்பிற்கும், செம்மொழித் தமிழின் நவீன வளர்ச்சிக்கும், எதிர்காலத் தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் வழிகாட்டும் ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாக நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.


