எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை நேரில் பார்வையிடும் நோக்கில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கான களவிஜயம் நேற்று (05) இடம்பெற்றது.
மாவட்ட தகவல் அதிகாரி வி. ஜீவானந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக் களவிஜயத்தின் போது, மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆயித்தியமலை வடக்குப் பகுதியில் பிரஜாசக்தி வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் நேரில் பார்வையிட்டனர்.
இதன்போது, இப்பகுதி விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, அரசாங்கத்தினால் 15 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நெல் உலர்த்தும் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் பார்வையிடப்பட்டன.
நெல் உலர்த்தும் இயந்திர வசதி இன்மையால், மழைக்காலங்களில் நெல்லை உலர்த்துவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட இப்பகுதி விவசாயிகள், தமது விளைச்சலைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை நீண்டகாலமாகக் காணப்பட்டது. இந்நிலையைக் கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்படும் இத்திட்டம், விவசாயிகளின் அறுவடைக்குப் பின்னரான இழப்புகளைக் குறைத்து, அவர்களின் வருமானத்தை மேம்படுத்தும்.


