எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்பதாவது சர்வதேச ஆய்வு மாநாடு – IRC 2026, “இயற்கையை மீள நினைவுகூர்தல்: கலைச் செயற்பாடுகளில் சூழல்–அழகியல் முன்னோக்குகள்” என்ற தொனிப்பொருளில் நேற்று (20) ஆரம்பமாகியது.
20, 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நடைபெறும் இம்மாநாடு, இயற்கை, சூழலியல் மற்றும் கலை ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகளை ஆராயும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன், ஆன்மீக உரையினை சுவாமி நிலமாதவானந்த ஜீ மஹாராஜ் அவர்கள் வழங்கியதுடன் விபுலானந்தர் பாடல் மற்றும் வரவேற்பு நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஒன்பதாவது சர்வதேச ஆய்வு மாநாட்டின் வரவேற்புரையை மாநாட்டின் தலைவர் கலாநிதி தி. விவானந்தராசா வழங்கியதுடன், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி தலைமையுரையை நிகழ்த்தினார்.
கலை மற்றும் நாடக பீடம், காட்சிக் கலை மற்றும் அரங்கேற்றக் கலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சௌம்ய லியனகே மாநாட்டின் பிரதான உரையை நிகழ்த்தினார்.
இதன்போது சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் கலந்து கொண்டார்.
மாநாட்டின் தொடர்ச்சியாக ஆய்வுப் பரிமாற்ற அமர்வுகள், கலை நிகழ்வுகள், இடம் சார்ந்த கலை நிகழ்த்துகைகள், சமூக அணுகல் நிகழ்வுகள் மற்றும் பல்வேறு ஆய்வுக் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
இம்மாநாட்டில் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆய்வாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் கலைத்துறையுடன் தொடர்புடைய பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்கின்றனர்.
“இயற்கையை மீள நினைவுகூர்தல், கலைச் செயற்பாடுகளில் சூழல்–அழகியல் முன்னோக்குகள்” என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் இம்மாநாடு இயற்கைக்கும் மனிதனுக்கும் கலைக்கும் இடையிலான உறவை மீளாய்வு செய்வதுடன் கலைப் படைப்புகளில் சூழலியல் சிந்தனைகளை முன்னெடுப்பதற்கான புதிய அணுகுமுறைகளை உருவாக்கும் முக்கிய தளமாக அமையவுள்ளது.
இதன்போது கலைக்கும் இயற்கைக்கும் இடையிலான தொடர்புகளை எடுத்துக்காட்டும் வகையில் பல்வேறு ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன், கலை நிகழ்த்துகைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இம் மாநாட்டில் 130 ஆய்வு கட்டுரைகள் பெறப்பட்டதில் 83 கட்டுரைகள் இன்று அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


