எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பில் இலத்திரனியல் முறையில் காணி உரித்துச் சான்றிதழ்களைப் பதிவு செய்வது தொடர்பான பயிற்சி நெறி இன்று (20) மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கிழக்கு வலய பிரதி பதிவாளர் நாயகம் கே. நடராசா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் கலந்துகொண்டார்.
உரித்து பதிவு செய்தல் பிரிவின் உதவிப் பதிவாளர் நாயகம் ஷாமிலி கருணாரத்னவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, பயிற்சி நெறிக்கு வளவாளராகச் செயற்பட்டார்.
மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் கல்முனை காணிப் பதிவகங்களில் கடமையாற்றும் காணிப் பதிவாளர்கள், மேலதிக காணிப் பதிவாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு, இலத்திரனியல் நவீன முறையில் காணி உரித்துச் சான்றிதழ்களைப் பதிவு செய்தல் மற்றும் வழக்குதல் தொடர்பான சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
காணி தொடர்பான நடவடிக்கைகளைத் துல்லியமாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுப்பதற்கும், காணி உரித்து ஆவணங்களைப் பதிவு செய்யும் பணிகளை மேலும் இலகுவாக்குவதற்கும் இப்பயிற்சி நெறி வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், காணி தொடர்பான பிணக்குகளைத் தவிர்த்து, உரித்துச் சான்றிதழ் பதிவுச் செயற்பாடுகளை நவீனமயப்படுத்தும் நோக்கிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


