(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ)
மன்னார் மாவட்டத்தில் வர்த்தமானியின் பெருவிழாவாக கொண்டாடப்படும் மருதமடு அன்னiயின் கடந்த ஆவணி மாத பெருவிழாவுக்கு பல இலட்சம் மக்கள் வருகை தந்திருந்த பொழுதும் பக்தர்களுக்கான சகல அத்தியாவசிய தேவைகளும் சிறப்பான முறையில் மேற்கொண்டிருந்தமையையிட்டு மன்னார் மறைமாவட்டம் நன்றியை தெரிவித்துள்ளது.
கடந்த ஆவணி மாதம் 6ந் திகதி தொடக்கம் 15ந் திகதி வரை மன்னார் மாவட்டத்தில் உலக பிரசித்தப் பெற்றதும் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒரு பெருவிழாவாக காணப்படும் மருதமடு பெருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவுக்கான சகல மத வழிபாட்டு நிகழ்வுகளும் மன்னார் மறைமாவட்ட ஆயரின் தலைமையில் ஒழுங்கு செய்யப்படுகின்றபோதும் இவ்விழாவுக்கு வருகை தரும் பக்தர்களின் வருகைக்கேற்றவாறு அவர்களுக்கான சகல அத்தியாவசிய தேவைகளையும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் சம்பந்தப்பட்ட திணைக்கள தலைவர்க்ள மற்றும் பிரதிநிதிகளுடன் ஒழுங்கமைப்பு செய்வது வழமையானது ஒன்றாகும்
இந்த வகையில் கடந்த ஆவணி பெருவிழாவவையிட்டு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு ஞானப்பிரகாசம் ஆண்டகை- குருக்கள் மற்றும் துறவறத்தார் சார்பாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் பெருவிழாவுக்காக ஒத்துழைத்த யாவருக்கும் தெரிவித்துள்ள நன்றி மடலில்
2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத மடுத் திருவிழா சிறப்பாக நிறைவடைவதற்கு அயராது உழைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் ஆழ்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இத்திருவிழா பாடசாலை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களுடன் இணைந்து வந்ததால் இவ்வருடம் முன்னெப்போதும் இல்லாத அளவிலான பக்தர்களின் வருகையை நாங்கள் கண்டோம். பெருமளவிலான மக்கள் வருகை தந்த போதிலும் பலரின் அர்ப்பணிப்புமிக்க சேவையால் இந்நிகழ்வு மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டது.
தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதில் திறமையான தலைமைத்துவத்தையும்- மிகத் துல்லியமான ஏற்பாடுகளையும் மேற்கொண்ட மன்னார் மாவட்டச் செயலாளர் திரு. கனகேஸ்வரன் அவர்களுக்கு நாங்கள் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் திருவிழா நாட்களில் மடுத் திருத்தலத்தில் அளப்பரிய சேவையாற்றிய அனைத்து அரச மற்றும் அரச சார்பற்ற திணைக்களங்களுக்கும்- முப்படையினருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம். உங்கள் தளராத ஆதரவு மற்றும் ஒத்துழைப்பின் காரணமாகவே இத்திருவிழா மாபெரும் வெற்றியை அடைந்தது என்றும்
மடு அன்னை உங்களை எப்போதும் பாதுகாத்து தனது தாய்மைக்குரிய பராமரிப்பில் வழிநடத்துவாராக! என மன்னார் மறைமாவட்ட ஆயர்- குருக்கள்- துறவறத்தார் மற்றும் இறைமக்கள் சார்பாக குரு முதல்வர் இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார்.


