மடுத்திருப்பதிக்கு வழங்கப்படும் நீர் விநியோகத்திற்கு பெரும் தொகைப் பணம் செலுத்த வேண்டிய நிலை. ஆயர் கவலை.

(வாஸ் கூஞ்ஞ) 13.08.2026

மடு திருப்பதி வளாகத்திற்குள் குளம் கிணறுகள் இருந்தும் மடுப்பதிக்கு வருகை தரும் யாத்திரிகள் தொடக்கம் மடு ஆலய அனைத்து சகல பாவனைகளுக்கும் நீருக்கு பெருமளவான கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் மடுத் திருப்பதி இருப்பதாக ஆயர் கவலை தெரிவித்துள்ளார்.

மடு ஆவணிப் பெருவிழாவை முன்னிட்டு கடந்த செவ்வாய் கிழமை (11.08) மடு யோசவ்வாஸ் மண்டபத்தில் பெருவிழாவுக்கான மிளாய்வுக் கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றபோது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் மடு பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளார் குரு முதல்வர் அருட்பணி கிறிஸ்து நேசன் ஆகியோர் உட்பட திணைக்கள தலைவர்கள் மற்றும் இதன் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை மடுப் பகுதியில் நீர் விநியோகம் தொடர்பாக இங்கு கருத்து தெரிவிக்கையில்

மடு வளாகத்திற்குள் குளம் ஒன்றும் கிணறுகளும் இருக்கின்றன. இதிலிருந்து இங்குள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விட்டாலும் இந்த தண்ணீருக்கு நாங்கள் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்து வருகின்றது.

இந்த மடு ஆலயத்திற்கு வரும் வாகன உரிமையாளர்கள் நேர்த்திக் கடனாக தங்கள் வாகனங்களை இங்கு கழுவிச் செல்லும் நிலையும் இருந்து வருகின்றது. இதற்கான தண்ணீர் கட்டணமும் மடு பரிபாலனமே செலுத்தி வருகின்றது.

நான் மடு பரிபாலகராக இருந்த காலத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபைக்கு செலுத்தும் கட்டணத்தை அரைவாசியாக குறைக்கும்படி அவர்களிடம் விண்ணப்பித்திருந்தேன் நான் இவர்களை குற்றம் சாட்டவில்லை ஆனால் இவர்கள் இதில் கவனம் செலுத்தவில்லை என்பதுதான் கவலை.

நமக்குத் தெரியும் பல லட்சம் மக்கள் இங்கு ஒன்றுகூடும்போது தண்ணீருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கின்றது யாவரும் அறிவீர். மந்தி கூட்டம் கால்நடைகள் வந்து பைப்புக்களை உடைத்து நீர் வெளியேறிக் கொண்டு இருந்தாலும் இதற்கு நாங்கள்தான் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

பக்தர்கள் நீர் குழாய்களை திறந்து விட்டுச் சென்றாலும் ஒரு துள்ளி தண்ணீர் வீணாகினாலும் இந்த தண்ணீருக்கும் நாங்கள்தான் கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது. இதனால் நாலு லட்சம் ரூபாவுக்கு மேல் கட்டணம் நாங்கள் நீர் வடிகாலமைப்புக்கு செலுத்த வேண்டியுள்ளது.

எங்களால் பாதுகாக்கப்படும் குளம் கிணறு இவற்றிலிருந்து வருகின்ற தண்ணீருக்கு நாங்கள் பெரும் தொகைப் பணத்தை செலுத்த முடியாத நிலையில் இருப்பதால் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபை இதை பரீசீலனை செய்து ஒரு பகுதிக்காவது இலவச நீர் வழங்கவும் இப்பொழுது அறவிடப்படும் கட்டணத்தை அரைவாசியாக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி வேண்டி நிற்கின்றேன்

இவ்வாறு மின்சாரம் வழங்கலிலும் பிரச்சனைகள் காணப்படுகின்றது. இது தொடர்பாக எதிர்காலத்தில் நிலையான ஒரு திட்டத்தை மேற்கொள்வதற்காக எண்ணியுள்ளோம் என இவ்வாறு தெரிவித்தார். (60)