காலநிலை மாற்றம் காரணமாக, இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடும் வெப்பம் நிலவும் நாட்களில் நாளொன்றுக்கு நான்கு மணி நேரத்திற்கும் அதிகமாக தீவிர வெப்பம் நீடிக்கக்கூடும் என புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.
சீனாவின் Sun Yat-sen பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு, Nature Climate Change அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை வெப்பத்தின் தாக்கம் பெரும்பாலும் ஒரு நாளின் சராசரி, அதிகபட்ச அல்லது குறைந்தபட்ச வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்டது. ஆனால் சில மணி நேரங்கள் மட்டுமே நீடிக்கும் ஆபத்தான வெப்பநிலை உயர்வுகள் இத்தகைய தினசரி கணக்கீடுகளில் கவனிக்கப்படாமல் போகலாம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
80%க்கும் அதிகமான நிலப்பரப்புகள் பாதிப்பு
1981 முதல் 2023 வரையிலான உலகளாவிய வானிலைத் தரவுகளை ஆய்வாளர்கள் ஆராய்ந்துள்ளனர். அதன் அடிப்படையில், உலகின் நிலப்பரப்புகள் கோடைகாலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 269 மணி நேரம் தீவிர வெப்பத்திற்கு உள்ளாகின்றன.
1981–2023 காலப்பகுதியில் உலகளவில் கடுமையான வெப்ப மணிநேரங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதுடன், தற்போது 80 சதவீதத்திற்கும் அதிகமான நிலப்பரப்புகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் சராசரியாக 62 கூடுதல் தீவிர வெப்ப மணிநேரங்கள் பதிவாகியுள்ளன.
2070–2099 காலத்தில் நிலைமை மேலும் மோசமாகலாம்
பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் தொடர்ந்து அதிகரிக்கும் உயர்ந்த உமிழ்வு சூழ்நிலையில், 2070 முதல் 2099 வரையிலான காலப்பகுதியில், ஏற்கனவே வெப்பமான நாட்களில் நாளொன்றுக்கு நான்கு மணி நேரத்திற்கும் அதிகமான கூடுதல் தீவிர வெப்பம் ஏற்படக்கூடும்.
வழக்கமான அளவீடுகளின்படி வெப்ப நாளாகக் கருதப்படாத நாட்களிலும் கூட மூன்று மணி நேரம் வரை ஆபத்தான வெப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வு எச்சரிக்கிறது.
ஏழை நாடுகளுக்கு அதிக பாதிப்பு
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் உலகளாவிய வெப்பச் சுமையின் 75 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியை ஏற்கனவே எதிர்கொள்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நாடுகளில் வெப்பத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள தேவையான வசதிகள் குறைவாக இருப்பதால், மக்களின் உடல்நலம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும்.
எனவே, தினசரி வெப்பநிலையை மட்டும் கண்காணிப்பதைவிட மணிநேர அடிப்படையிலான வெப்பநிலை கண்காணிப்பையும் முன்னெச்சரிக்கை அமைப்புகளில் சேர்க்க வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


