காரைதீவு மற்றும் சம்மாந்துறை ஆயுர்வேத சிகிச்சை நிலையங்கள் திறந்து வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

தற்போதைய அரசின் “அனைவருக்கும் ஆரோக்கியம்” மற்றும் பாரம்பரிய மருத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், காரைதீவு மற்றும் சம்மாந்துறை பிரதேச மக்களுக்காக நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஆயுர்வேத சிகிச்சை நிலையங்கள் அதிகாரப்பூர்வமாக நேற்றுமுன்தினம் புதன்கிழமை (12) திறந்து வைக்கப்பட்டன.

காரைதீவு புதிய சுதேச வைத்தியசாலைக்கு 18 மில்லியன் ரூபாவும் சம்மாந்துறை மாவட்ட சுதேச வைத்தியசாலையில் நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெறும் புதிய விடுதி வசதிக் கட்டடத்திற்கு 18 மில்லியன் ரூபாவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தகுதிவாய்ந்த ஆயுர்வேத வைத்தியர்களின் இலவச ஆலோசனை, மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை பிரதேச மக்கள் நன்மையடையும் வண்ணம் மிக இலகுவாகக் கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர, திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு இவ்வேலைத் திட்டங்களை ஆரம்பித்து வைத்தனர்.