ஹஸ்பர் ஏ.எச்-
இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் முன்னணி உச்ச வணிக அமைப்புகளில் ஒன்றான இந்திய வர்த்தக சபை (Indian Chamber of Commerce – ICC) தலைமையிலான 31 உறுப்பினர்களைக் கொண்ட வணிக பிரதிநிதிகள் குழு, இருதரப்பு வர்த்தகம் மற்றும் வணிகக் கூட்டாண்மைகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராயும் நோக்கில் 2026 ஜூலை 28 முதல் 30 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டது. இவ்விஜயம், இந்திய வர்த்தக சபையின் தமிழ்நாடு மாநிலக் குழுவினால் ஒருங்கிணைக்கப்பட்டது. உற்பத்தி, மருந்துகள், பொறியியல் பொருட்கள், ஆடை மற்றும் நெசவு, உணவு மற்றும் விவசாயப் பொருட்கள், மற்றும் உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இக்குழுவில் இடம்பெற்றிருந்தன.
விஜயத்தின் போது, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களை பிரதிநிதிகள் குழு சந்தித்தது. அப்போது, இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்த தகவல்களை அவர் பகிர்ந்ததுடன், வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதன் மூலம் இந்தியா–இலங்கை பொருளாதார கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான முக்கிய வாய்ப்புகளையும் எடுத்துரைத்தார். மேலும், பரஸ்பர நலன் சார்ந்த துறைகள் மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடனும் பிரதிநிதிகள் குழு கலந்துரையாடியது.
அதனைத் தொடர்ந்து, இந்திய–இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (Indo-Lanka Chamber of Commerce and Industry – ILCCI) உறுப்பினர்கள் மற்றும் ஹேலீஸ் குழுமம் (Hayleys Group), ஆக்சஸ் குழுமம் (Access Group) ஆகியவற்றின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகள் இடம்பெற்றன. இச்சந்திப்புகள் புதிய வர்த்தக வாய்ப்புகளை அடையாளம் காணவும், இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் உதவின.
இருதரப்பு வர்த்தகத்தை ஊக்குவித்து, வணிகம்-வணிகம் (B2B) தொடர்புகளை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்திய CEO மன்றத்துடன் இணைந்து, “இந்தியா–இலங்கை வர்த்தக இணைப்பு: ICC பிரதிநிதிகள் குழுவுடன் கலந்துரையாடல்” என்ற தலைப்பில் 2026 ஜூலை 28 அன்று கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஒரு வணிகச் சந்திப்பை ஏற்பாடு செய்தது.
இந்நிகழ்வில், இந்தியாவிலிருந்து வந்த வணிக பிரதிநிதிகளுடன் இலங்கையின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் முக்கிய வணிக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வணிகப் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். புதிய வர்த்தக கூட்டாண்மைகளை உருவாக்கவும், இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் பயனுள்ள B2B தொடர்புகளுக்கான சிறந்த தளமாக இந்நிகழ்வு அமைந்தது.
தனது உரையில், உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான மிகப்பெரிய, இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படாத வாய்ப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டினார். வணிகம்-வணிகம் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதுடன், மாநில அளவிலான பொருளாதார ஒத்துழைப்பு இந்தியாவின் சர்வதேச பொருளாதார அணுகுமுறையின் முக்கியத் தூணாக உருவெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நிகழ்வின் போது, இந்திய வர்த்தக சபை மற்றும் இலங்கையின் தேசிய ஏற்றுமதியாளர்கள் சபை (National Chamber of Exporters of Sri Lanka) மற்றும் இளம் இலங்கைத் தொழில்முனைவோர் சபை (Chamber of Young Lankan Entrepreneurs) ஆகியவற்றுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) முறையாகப் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இவ்வொப்பந்தங்கள், தகவல் பரிமாற்றம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு மேம்பாடு, வணிக வலையமைப்பு, மற்றும் புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை அடையாளம் காணுதல் ஆகியவற்றின் மூலம் நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்திய வர்த்தக சபை பிரதிநிதிகள் குழுவின் இந்த விஜயம், மேம்பட்ட இருதரப்பு வர்த்தகம், அதிகரித்த முதலீடு, மற்றும் வலுவான வணிகத் தொடர்புகள் மூலம் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்கான இருநாடுகளின் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், மாநில மற்றும் பிராந்திய அளவிலான நெருங்கிய கூட்டாண்மைகளையும் இவ்விஜயம் ஊக்குவித்துள்ளது


