ஜெர்மனியில் வீட்டின் மீது விழுந்த சிறிய விமானம் – இருவர் உயிரிழப்பு

ஜெர்மனியின் நிடர்சாக்சன் மாநிலத்திலுள்ள ஓல்டன்பர்க் மாவட்டத்தின் காண்டர்கெசே பகுதியில், சிறிய ரக விமானம் ஒன்று தனி வீட்டின் கூரை மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.

சனிக்கிழமை காலை சுமார் 11 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தைத் தொடர்ந்து, தீயணைப்புப் படையினர், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விமானம் திடீரென உயரத்தை இழந்து குடியிருப்புப் பகுதியிலிருந்த வீட்டின் கூரை மீது மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்திலிருந்து முதலில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. மற்றைய நபரைத் தேடும் பணிகள் பல மணி நேரம் நீடித்த நிலையில், அவரும் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். உயிரிழந்த இருவரின் அடையாளங்கள் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

விபத்து நிகழ்ந்தபோது வீட்டில் வசிப்பவர்கள் அங்கு இருக்கவில்லை. இதனால் வீட்டிலிருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் வேறு நபர்களும் காயமடையவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான விமானம் சம்பவம் நடைபெறுவதற்குச் சற்று முன்னர் பிரேமன் நகரிலிருந்து புறப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.