பிரேசிலின் ஃபோர்டலேசா நகரில், கறுப்பினப் பெண் ஒருவர் தனது ஏழாவது வயதிலிருந்து ஒரே குடும்பத்தின் மூன்று தலைமுறையினருக்காகச் சம்பளமின்றி வீட்டு வேலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அந்தப் பெண்ணுக்கு பாடசாலைக் கல்வி வழங்கப்படவில்லை. சம்பளமோ, சுதந்திரமான தனிப்பட்ட வாழ்க்கையோ இல்லாமல், வெளியுலகத் தொடர்புகள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அவர் சுமார் 55 ஆண்டுகள் வாழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது சிறை வாழ்க்கைக்கு ஒப்பானதாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இந்த வழக்கை விசாரித்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குறைந்தபட்சம் 30,000 அமெரிக்க டொலர் பெறுமதியான வீடு ஒன்றை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று குடும்பத்தினருக்கு உத்தரவிட்டுள்ளனர். அத்துடன் மேலும் 10,000 டொலர் இழப்பீடு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரேசிலின் தொழிலாளர் கண்காணிப்பு அதிகாரிகள், இந்தப் பெண் பணிபுரிந்த சூழல் “அடிமைத்தனத்திற்கு ஒப்பான தொழிலாளர் நிலைமை” எனத் தெரிவித்துள்ளனர்.
சிறுவயதிலேயே கல்வி மற்றும் சுதந்திரம் மறுக்கப்பட்டு, பல தசாப்தங்களாக ஊதியமின்றி உழைக்க வைக்கப்பட்ட இச்சம்பவம் பிரேசிலில் கடும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


