இன்று கதிர்காமம் தெய்வானை அம்மன் ஆலயத்தில் கொடியேற்றம்!

( வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் தெய்வானை அம்மன் ஆலயத்தில் இன்று(20) திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு கொடியேற்றம் இடம்பெறவுள்ளது.

உண்மையில் தெய்வானை அம்மன் கோவிலில் ஏற்றப்படும் சேவல் கொடியே கதிர்காமக் கொடியேற்றமாகும்.

கதிர்காமத்தின் சைவ முறைப்படியான கொடியேற்றம் ஆடிவேல் உற்சவத்தின் ஆறாம் நாளில், தெய்வானை அம்மன் கோவில் முன்னால் உள்ள தேக்குக் கொடி மரத்தில் இடம் பெறுவது வழக்கம்.

தெய்வானை அம்மன் ஆலயத்திற்கான பிரத்யேக காவி நிற சேவல் கொடி திருவிழாவின் ஆறாம் நாளே ஏற்றப்படுவதுமா வழக்கம்.

இன்றைய தினம் தெய்வானை அம்மன் ஆலய பீடாதிபதியால் சைவ முறைப்படி கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மங்கல வாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்படும்.

இதே நாளில் தான், அருகில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முத்துலிங்க ஈஸ்வரர் (சிவன்) ஆலயத்திலும் கொடியேற்ற நிகழ்வு நடைபெறும்.

முறைப்படி வெட்டப்பட்டு, தெய்வானை அம்மன் ஆலயத்தில் வைத்து பூஜிக்கப்படும் தேக்கு மரக் கம்பத்தில், சேவல் சின்னம் பொறித்த சிவப்பு நிறக் கொடி கட்டப்பட்டு சிவாச்சாரியார்களால் இந்தக் கொடி நடப்படும்.

இதுவே நாம் தரிசிக்கத் தகுந்த கொடியேற்றமாகும். இது பல நூறு ஆண்டுகளாக நடந்து வருகின்றது.

தெய்வானை அம்மன் ஆலயம் மற்றும் இந்த கொடியேற்றம்பற்றிய வரலாறு , அத்துடன் கதிர்காம தர்காவின் வரலாற்றையும் “Kataragama: The Mystery Shrine” , the , கதிரை பள்ளு போன்றசான்றுகளுடன் நிறுவியுள்ளது.

வரலாற்றின் படி முருகப் பெருமை காண வந்து அங்கேயே கோவில் கொண்டாள் அன்னை தெய்வானை.
கதிர்காம வரலாற்றை அறிய உதவும் ‘கதிரை மலைப் பள்ளு’ மற்றும் ‘Kataragama: The Mystery Shrine’ போன்ற நூல்களின் படி, முதலாம் கல்யாணகிரி சுவாமிகள் அநாதி காலத்திலேயே தெய்வானை அம்மனை வழிபட்டதையும், பின் இரண்டாம் கல்யாணகிரி சுவாமி கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் ஒரு சிறு கொத்துப் பந்தலிட்டு அதை ஒரு ஆலயமாக ஆக்கியதும், இறுதியாக வடநாட்டிலிருந்து வந்த மூன்றாம் கல்யாணகிரி சுவாமி 16-ஆம் நூற்றாண்டில் அதை கல் ஆலயமாக இப்போதைய நிலைக்குக் கட்டியதும் கூறப்பட்டுள்ளது.

அப்போதிருந்தே இந்த தெய்வானை அம்மன் ஆலயத்தில் தான் சைவ முறைப்படி கொடி ஏற்றப்படுகிறது. அதுவே சைவர்கள் தரிசிக்கத் தகுந்தது.

அங்குள்ள தர்காவின் வரலாற்றை பார்த்தால் இது ஏற்பட்டு 135 வருடங்களே ஆகின்றன. இதனை நிறுவியவர் கதிர்காம அம்மன் கோவில் சேவகராய் இருந்த பால்குடி பாவா (கேசவுரி பாவா) என்ற பேரன்பர். இவர் ஒரு சைவ குரு. இவர், தன்னுடன் இந்தியாவிலிருந்து வந்து தங்கி இருந்த முஸ்லிம் சந்நியாசி “செய்யது ஜப்பார் அலிபாவா” என்பவருடன் அன்பிறந்த நட்புக்கொண்டு இருவரும் மதவிசாரணையில் ஈடுபட்டு ஆத்மீக நண்பர்களாக இருந்து வந்தனர்.

கொஞ்சகாலத்தின் பின்னர் அம்முஸ்லிம் சந்நியாசி பரமபதம் அடைந்தார். அதைக் கண்டதும் பால்குடி பாவா முஸ்லிம் சந்நியாசியுடன் தான் கொண்டிருந்த அளவிலா அன்பிற்கிணங்க வள்ளியம்மன் கோவிலில் பக்கமாக ஓரிடத்தில் அவரை நல்லடக்கம் செய்தார்கள்.

இதன் பின் 1898 இல் பால்குடி பாபாவும் காலமானார். இவரது காலத்தில் தான் அந்த பக்ரீத் மடம் கட்டப்பட்டது .

இதன்பின்னர் இம் முஸ்லிம் சந்நியாசியின் வம்சத்தில் வந்த ” மீர் செய்யது அலிபாவா” மேலே சொன்ன தனது குருநாதரின் சமாதியின் பேரில் ஒரு குடி கட்டுவித்து திருவிழா காலங்களில் சகல யாத்திரிகர்களும் வந்து வணங்கும்படியான சில உபகாரங்களும் செய்ய ஆரம்பித்தார்.

1922-ம் வருடம்வரை கதிர்காம தெய்வானை அம்மன் கோவிலில் இருந்துதான் இந்த பக்ரீத் மடத்திற்கு சாப்பாட்டு மற்ற உதவிகளும் கொடுத்து வந்தார்கள்.

பக்கீர் மடத்தில் இருந்துவந்த பாவா மீர் செய்யது முகம்மது அமிஷா அவர்கள் 1945ல் காலஞ்சென்றும் இந்த பக்கீர் மடம் பள்ளிவாசல் என்ற பெயரால் அழைக்கப்படலாயிற்று. காரணம் எப்படியெனில் கதிர்காமத்தை சர்வே செய்யவந்த அரச உத்தியோகஸ்தர்களிடம், பக்ரீத் மடத்தில் இருந்தவர்கள் இது ஒரு முஸ்லீம்களின் பள்ளி என்று ஒரு விஷயத்தை முன்வைத்தார்கள்.பின் இது ஒரு பிரச்சினையாக உருவெடுக்க பலரும் பக்கீர் மடத்தின் உரிமை கோரி கோர்ட்டை ஏறி வழக்காட முனைந்தார்கள்.

1873-ம் வருடத்தில் hampanthota உதவி அரசினராக ஏஜண்டாக இருந்த திரு. டி. ஸீல் என்பவர் தனது அறிக்கையில் கதிர்காமத் திருவிழாவைப் பற்றி எழுதியதில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்..

“கதிர்காமத்திலுள்ள பள்ளி என்ற ஸ்தாபனத்தில் இலங்கையிலுள்ள முஸ்லீம்களுக்கு ஒருவித சிரேஷ்ட உரிமையோ இல்லை. இந்தியாவிலிருந்து பக்கீர்கள் மட்டும் வந்து போவார்கள். இது முஸ்லீம் மதப்பீடமான பள்ளியல்ல (தொழுகை ஸ்தலமல்ல) ஒரு பெரிய அடக்க ஸ்தலம்” என்று எழுதியுள்ளார்.

பிறகு கொழும்பு தாதூ என்பவர் கோர்ட்டில் D. C. 100-ம் நம்பர் ஸுட்டில் வழக்குத் தொடர்ந்து முஸ்லீம் டிரஸ்ட் ஓடினன்ஸின் கீழ் தன்னை டிரஸ்டியாக நியமிக்கவேண்டுமென்று மனுப்போட்டார்.
இம்மனுவிற்கு கதிர்காமத்திலுள்ள பெரியகோவில் கபுறாளர் திரு. மாரினஸ் அப்பு வன்னி, அம்மன் கோவில் கபுறாளர் திரு. பரினஸ் அப்பு, தெய்வானை அம்மன் கோவிலில் மந்தார சுவாமி இராமகிழி, கதிர்காம கிராம விதான் திரு. தேசிஸ் அப்பு, முத்தைய சுவாமி கோவிலில் தருமகர்த்தா திரு. பி. கந்தையா, இன்னும் சிலரும் சேர்ந்து மேலே சொன்ன ஸ்தாபனம் முஸ்லீம் பள்ளி அல்ல என்றும், காலஞ்சென்ற மீர் செய்யது அலிஅலிபாவா என்ற தனிநபருக்குச் சொந்தமான இடமென்றும், அவரின் சந்ததியைச் சேர்ந்த காலஞ்சென்ற பக்கீர் பெரியாரின் சமாதி என்றும் மேற்படி ஸ்தாபனம் முஸ்லீம்களின் சட்டபூர்வமான பள்ளி அல்ல என்றும் எதிர் மனு கொடுத்து வழக்கை முடக்கினர். இதுவே அந்த பள்ளியின் வரலாறு ஆகும்.