தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேற்று கரூர் மக்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது அவர் பேசிய விடயங்கள் மக்கள் மத்தியில் பேசுப் பொருளாக மாறியுள்ளது.
கரூர் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், முன்னாள் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தனது உரையை ‘கரூர் சம்பவம்’ குறித்த வேதனையுடனேயே அவர் ஆரம்பித்தார்.
கரூர் சம்பவத்தின் பின்னணி குறித்தும், அப்போது காவல்துறை வழங்கிய பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்பிய முதலமைச்சர், அந்தச் சம்பவம் தனது மனதிற்கு ஆறாத காயம் எனத் தெரிவித்தார்.
கடந்த ஆட்சியின் நிர்வாகத்தில் பல்வேறு துறைகளிலும் ‘ கட்சி நிதி ‘ என்ற பெயரில் ஊழல் நடைபெற்றதாகவும், சென்னை பாலம் கட்டுமானத்தில் வழக்கத்தை விட இருமடங்கு நிதி ஒதுக்கப்பட்டு முறைகேடு நடந்ததாகவும் குற்றம் சாட்டினார். இத்தகைய ஊழல்களைக் கண்டறிந்து ரத்து செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சட்ட சபையில் கருத்துரைக்கும் போது கட்சி நிதியை பற்றி வாயை திறந்ததும் எதிர்க்கட்சியினர் சட்டசபையில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.இவற்றை பார்க்கும் போது சட்டசபை எனக்கு சிறந்த ஒரு பொழுதுப்போக்காக இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், கடந்த ஆட்சியை ‘ஓட்டை பாத்திரம்’ என விமர்சித்த அவர், தற்போதைய ஆட்சியில் அரசு அலுவலகங்களில் கையூட்டல் மற்றும் ஊழல் அறவே ஒழிக்கப்பட்டு, பணிகள் விரைவாக நடைபெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தான் அமைதியாக இருந்தால் விமர்சிப்பதும், பேசினால் அரசியல் தெரியவில்லை எனச் கூறுவதும் எதிர்க்கட்சிகளின் வாடிக்கையாகிவிட்டதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், “பேசுவதை விட செயலில் காட்டுவதே நமது கொள்கை” என்று தெரிவித்தார்.
அத்துடன் அண்ணா பிறந்தநாளன்று ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடங்கப்படும் என அறிவித்தார். தான் ‘ரியல் தாய்மாமன்’ என்றும், தீயசக்திகளைப் போல போலியானவர் அல்ல என்றும் கூறினார்.
மேலும், நான் பேசவில்லை என்றால் வாயத் திறங்க CM என பேட்ஜ் குத்திக்கொண்டு வருகின்றனர், நான் பேசினால் விஜய்க்கு அரசியல் பேசத் தெரியவில்லை என சொல்வார்கள், நான் 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டுவிட்டார்கள் எனவும் நயத்தக்க விமர்சனங்களை முன்வைத்தார்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதல் முறையாக கரூர் மக்களை நேரில் சென்று சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


