தண்டனை விதிக்கப்பட்ட சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட, நியாயமான மற்றும் வெளிப்படையான நடைமுறையை உருவாக்குவதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜாவினால், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் ஆயிஷா ஜினசேனவிடம் குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள அரசியலமைப்பின் சட்ட ஏற்பாடுகள், கட்டளைகள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளை ஆராய்ந்து, சிறைச்சாலை துறையில் காணப்படும் நிர்வாக நடைமுறை குறைபாடுகளை அடையாளம் கண்டு பரிந்துரைகளை முன்வைப்பதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் அரச அதிகாரிகள், சட்டத்துறை நிபுணர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை துறை பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் உறுப்பினர்களாக இடம்பெற்றிருந்தனர்.
நாட்டின் சிறைச்சாலைகளில் காணப்படும் அதிக நெரிசலைக் குறைப்பதுடன், கைதிகளின் புனர்வாழ்வு நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளை நீக்கி, சர்வதேச தரங்களுக்கு ஏற்ப சிறைச்சாலை முறைமையை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இது முக்கியமான ஒரு கட்டமாகக் கருதப்படுகிறது.
குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து, பொருத்தமான முறையில் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.


