மாண்புறு மாதவிடாய் தொடர்பான முயற்சிகள்.

மனித சமூகம் ஆரம்பகாலம் முதல் பல கட்டுப்பாடுகளையும் வரையறைகளையும் கொண்டே கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் பல பிரச்சினைகள் தவிர்க்கப்பட்டிருந்தாலும் பல சிக்கல்களுக்கும் மன உழைச்சல்களும் ஏற்படுவதற்குக் காலாக அமைந்திருக்கிறது. இந்தக் கட்டுப்பாடுகள் வரையறைகளில் அதிகமானவை பெண்களை மையப்படுத்தியதாகவே காணப்படுவது அவதானிக்கப்பட்டிருக்கிறது. வளர்ச்ச்யடைந்த நாடுகளுக்கும் வளர்ந்துவரும் நாடுகளுக்கும் இதில் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. அதே நேரத்தில் இன, மதம், பரம்பரை, சாதி, குலம், குடி என அனைத்து வகையிலும் கட்டுப்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டதாக காணப்படுகிறது.

இவ்வாறான கட்டுப்பாடுகளில் முக்கியமானதாக பெண்கள் தம்முடைய மாதவிடாய் காலத்தில் அனுபவிக்கும் நெருக்கடியைக் குறிப்பிடமுடியும். வெளிப்படையாகவும் உள்ளார்ந்த ரீதியாகவும் விதிக்கப்படுகின்ற கட்டுப்பாடுகள் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களாகவே பெண்கள் காணப்பட்டனர்.  தற்போதைய சூழலில் இந்நிலைமையில் ஓரளவுக்கு மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் அது பெபண்களின் முயற்சியினாலேயே சாத்தியமாகியிருக்கிறது.

மாண்புடன் கூடிய மாதவிடாய் என்பது பெண்களின் வாழ்க்கைச் சுழற்சி முழுவதும் மாதவிடாய் தொடர்பான தடைகள், களங்கம், அவமானம், வெட்கம், துஷ்பிரயோகம், கட்டுப்பாடுகள் மற்றும் வன்முறை ஆகியவற்றிலிருந்து விடுபடுவதனைக் குறிக்கின்றது. மாதவிடாய் பாரபட்சம் என்பது பால்நிலை வன்முறையின் ஒரு அம்சமாகும். ஐ.நாவின் பாகுபாட்டு அடிப்படையைப் பொறுத்தவரையில்,  பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்முறைகள் நேரடியாக மாதவிடாய் பாரபட்சங்களுடன் தொடர்புறுகின்றன. உடல் ரீதியிலான தாக்குதல், கலாசார கட்டுக்களை மீறுவதால் நடத்தப்படும் உடல் ரீதியிலான வன்முறைகள், பேச்சினூடான துஷ்பிரயோகம், ஒதுக்கி வைத்தல், சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தல், கேலி பேசுதல், உணர்வுரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் வன்முறைக்குள்ளாக்கப்படல், பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்க முயற்சித்தல், பாலியல் தாக்குதல், பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் சுரண்டல் மற்றும் சிறுமிகளுக்குள்ள கல்விக்கான உரிமையை மறுத்தல், ஆண்களுக்கும், ஆண் பிள்ளைகளுக்கும் உணவுகளில் சேவைகளில் வளங்களில் முக்கியத்துவம் அளித்தல் என்பன பாரட்சங்களாகவே கருதப்படுகின்றன.

மாதவிடாய்ப்பிரச்சினைகளை எதிர் கொள்கின்ற தரப்பாக காணப்படும் பெண்களும் சிறுமிகளும்   எதிர்கொள்கின்ற பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகின்ற   மாண்புடன் கூடிய மாதவிடாய்க்கான உலகளாவிய உள்ளுர் மற்றும் சர்வதேச பங்குதாரர்களுடனான கலந்துரையாடல்கள், ஆய்வுகள், செயற்திட்டங்கள், செயற்பாடுகள் மேலும் பல பரந்துபட்ட கலந்திரையாடல்களையும் ஊக்குவிப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் பின்தங்கிய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சுகாதாரம் பற்றிய சவால்கள்  காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக வறுமை மற்றும் கல்விஅறிவின்மையும் தாக்கம் செலுத்துகிறது.

பெண்கள், சிறுமியர் மாதம் ஒருமுறை எதிர்கொள்ளும் இந்நெருக்கடி தொடர்பில் ஆராய முற்படும் போது  மாதவிடாய் சுகாதாரம், காலநிலை விவகாரம், பலதரப்பட்ட பால்நிலை அடையாளமும் பாலியல் நோக்குநிலையும், மாதவிடாயுடன் சம்பந்தப்பட்ட மற்றும் சிறுவர் திருமணங்களை  இல்லாதொழித்தல் பற்றிய வருங்கால செயற்றிட்டம், அவை தொடர்பான ஆக்கப்பூர்வமான செயற்பாடுகள், உடல்நலம் மற்றும் பால்நிலை தாக்கங்களின் அடிப்படையில் தொடர்புடைய நிகழ்வுகள் எனப் பல விடயங்கள் ஆராயப்படவேண்டும்.

அந்தவகையில்தான் ஒவ்வொரு வருடத்த்லும் டிசம்பர் மாதத்தில் நடைபெற்று வருகின்ற மாண்புறு மாதவிடாய் தொடர்பான சர்வதேச மாநாடுகளில் மாண்புடன் கூடிய மாதவிடாயை உறுதிப்படுத்துவதற்கான உலகளாவிய முன்னுரிமைகளாக மாதவிடாய் பாரபட்சத்தை அகற்றுவதற்கான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  அதன் ஓரு பகுதியே, மாண்புடன் கூடிய மாதவிடாய் குறித்த உரையாடல் உலகளாவிய ரீதியில் மிகவும் அவசியமான ஒன்றாகி விட்டஇச்சூழலில் டிசம்பர் 8 ஐ மாண்புடன் கூடிய மாதவிடாய்க்கான சர்வதேச தினமாக பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கான வரலாற்றைச் சுருக்கமாக நோக்குவோமாயின், 2003ம் ஆண்டு முதல் போரினாற் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காகவும்,  பாதிக்கப்பட்ட பெண்களுக்காவும்  பணியாற்றி வருகின்ற விழுது அமைப்பானது  பங்கேற்பு ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தும் மற்றும் பால்நிலை சமத்துவம், பொருளாதாரம், சமூக நீதி மற்றும் சமத்துவ மேம்பாடு ஆகியவற்றைக் கடைப்பிடிக்கும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமூக ரீதியாக ஒருங்கிணைந்த சமூகத்தை உருவாக்கும் கொள்கைகளின் கீழ்  இயங்குகின்றது.

அதே நேரத்தில், கொள்கை வகுப்பு பற்றிய உரையாடல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பை மேம்படுத்தவும், அத்தகையை நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட குழுக்களுடக்கு ஒரு மேடையை வழங்கவும் முயற்சிக்கின்றது. அத்துடன், மாண்புடன் கூடிய மாதவிடாய்க்கான உலகளாவிய தெற்குக் கூட்டணி, மாதவிடாயைப் பாதிக்கும் இடத்தில் உள்ள நிறுவன, கட்டமைப்பு, தனி நபர் மற்றும் சமூக அடக்குமுறை அமைப்புகளை அகற்றும் நோக்கத்துடன் செயற்படுகின்றது. பெண்களின் அடிப்படை மற்றும் தவிர்க்க முடியாத மனித உரிமைகள், மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுப்பதற்கான முக்கிய வசதிகளை அணுகுவதற்கான முயற்சிகளுக்கு உதவி அளிக்கின்றது.

விழுது அமைப்பானது,  2020ஆம் ஆண்டு  சர்வதேச ரீதியில் நடத்திய மூன்று நாள் செயலமர்வின் ஒரு பகுதியாக மாண்புடன் கூடிய மாதவிடாய் செயற்பாடு முன்னெனடுக்கப்பட்டு வருகின்றது. இந்த முயற்சிகளுக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும். மாண்புடன் கூடிய மாதவிடாய் தொடர்பில் மென்மேலும் உரையாடல்களும் செயற்பாடுகளும், பொது செயற்பாட்டாளர்கள். அமைப்புகள், சிவில் சமூக அமைப்பினர் மற்றும் கல்வியியலாளர்கள் போன்றோரால் ;மேற்கொள்ளப்படவேண்டும் என்பதே இத் தொடர் முயற்சியில் ஈடுபடும் ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்பாகும்.

சமூகத்தில் தற்காலத்தில் பேசப்படாமல் இருக்கின்றதும், ஆனால் கட்டாயம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியதும், இதுவரை காலமும் வெளியில் தெரிந்து விடக்கூடாது என்று மறைக்கப்பட்ட பெண்களின் பிரச்சினைகளில் முதன்மையானது மாதவிடாயதகும். இனியேனும் இதில் மாற்றம் ஏற்பட்டும்.