SUPEEDSAM NEWS | சுவிட்சர்லாந்து | 21.10.2026
சுவிஸ் மத்திய ரயில்வேயான SBB, ரயில்களில் இருக்கைகளுக்கு அருகிலுள்ள சிறிய குப்பைத்தொட்டிகளைப் படிப்படியாக அகற்றி வருகிறது. 2028ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தப் பணிகளை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
பல ரயில்களில் ஏற்கெனவே குப்பைத்தொட்டிகள் அகற்றப்பட்டுள்ள நிலையில், வெற்றுக் கோப்பைகள், பானக் கேன்கள் மற்றும் உணவுப் பொதிகள் இருக்கைகளிலேயே விடப்படுவதாகச் சில பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர் . இருக்கையருகே குப்பைத்தொட்டி இல்லாததைச் சுட்டிக்காட்டிய பயணி ஒருவரின் Instagram பதிவும் கவனம் பெற்றுள்ளது.
SBBயின் விளக்கம் என்ன?
இருக்கைப் பகுதிகளில் தூய்மையை அதிகரித்தல், துர்நாற்றத்தைக் குறைத்தல், கால்களுக்கு அதிக இடவசதி வழங்குதல் மற்றும் துப்புரவுப் பணிகளை எளிதாக்குதல் ஆகியவற்றுக்காகவே இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக SBB தெரிவித்துள்ளது. சிறிய தொட்டிகளைக் காலி செய்வதால் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஏற்படும் உடற்சுமையும் இதன்மூலம் குறையும் எனக் கூறுகிறது.
பயணிகள் ரயில் நுழைவுப் பகுதிகளிலுள்ள குப்பைத்தொட்டிகளையும், நிலையங்களிலுள்ள மறுசுழற்சி வசதிகளையும் பயன்படுத்த வேண்டும். இந்த நடைமுறை பொதுவாக நன்றாகச் செயற்படுவதாகவும், ரயில்களின் தூய்மை குறித்த எதிர்மறைப் புகார்கள் குறைந்த அளவிலேயே இருப்பதாகவும் SBB தெரிவித்துள்ளது.


