சூரிச்சில் டிசம்பர் 13 முதல் பொதுப் போக்குவரத்துக் கட்டண உயர்வு!

சூரிச் போக்குவரத்து வலையமைப்பின் ZVV கட்டணங்கள், 2026 டிசம்பர் 13ஆம் திகதி முதல் சராசரியாக 2.7 சதவீதம் அதிகரிக்கவுள்ளன. வருடாந்தப் போக்குவரத்து நேர அட்டவணை மாற்றத்துடன் நடைமுறைக்கு வரும் இந்தக் கட்டணத் திருத்தத்திற்கு சூரிச் மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

சூரிச் நகரம் அல்லது Winterthur நகருக்குள் பயணிப்பதற்கான வழமையான இரண்டாம் வகுப்பு 1–2 வலய ஒற்றைப் பயணச்சீட்டின் விலை 4.70 பிராங்கிலிருந்து 4.80 பிராங்காக உயரவுள்ளது. வழமையான மாதாந்த மற்றும் வருடாந்தப் பயண அட்டைகளின் கட்டணங்கள் சராசரியாக 2.1 சதவீதம் அதிகரிக்கும்.

மாநிலம் முழுவதற்கும் செல்லுபடியாகும், மற்றொருவருக்கு மாற்றிப் பயன்படுத்தக்கூடிய «9-Uhr-Monatsabo» மாதாந்தப் பயண அட்டையின் விலை 162 பிராங்கிலிருந்து 174 பிராங்காக உயரவுள்ளது. இது 7.4 சதவீத அதிகரிப்பாகும்.

இதனிடையே, Mehrfahrtenkarten எனப்படும் பலபயண அட்டைகளுக்கு வழங்கப்பட்டுவந்த மீதமுள்ள தள்ளுபடிகளும் நீக்கப்படுகின்றன. இதனால், ஆறு பயணங்களுக்கான அட்டையின் விலை, ஆறு தனித்தனி ஒற்றைப் பயணச்சீட்டுகளை வாங்கும் மொத்தத் தொகைக்குச் சமமாக இருக்கும்.

எனினும், குறுந்தூரப் பயணச்சீட்டுகள் — Kurzstrecke மற்றும் உள்ளூர் போக்குவரத்து வலையமைப்புகளுக்கான Lokalnetze கட்டணங்களில் மாற்றம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வாகனங்கள் மற்றும் போக்குவரத்து உட்கட்டமைப்புகளைப் பராமரித்தல், புதுப்பித்தல் மற்றும் சேவைகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றுக்கான செலவுகள் அதிகரித்துள்ளதே கட்டண உயர்வுக்கான முக்கிய காரணம் என ZVV விளக்கமளித்துள்ளது. மாநில நாடாளுமன்றத்தின் வழிகாட்டலின்படி, இயக்கச் செலவுகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமான தொகையைப் பயணச்சீட்டு மற்றும் பயண அட்டை வருமானம் மூலம் ஈடுசெய்ய வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.