கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில், அக்கரைப்பற்றுக்கும் பொத்துவிலுக்கும் இடைப்பட்ட தாண்டியடி சங்குமண்கண்டி அடர்ந்த காட்டுக்குள் அமைந்துள்ள அதிசய ஆலயமே சங்குமாங்கண்டி காட்டுப் பிள்ளையார் ஆலயம்.
இது Jungle Ganesh எனவும் அழைக்கப்படுகிறது.
அங்கே பாலஸ்தாபனம் இடம்பெற்று கும்பாபிஷேகத்துக்காக புனருத்தாரண பணிகள், ஆலய பரிபாலன சபைத் தலைவர் ஓய்வு பெற்ற பிரதிக் கல்வி பணிப்பாளர் வா. குணாளன் தலைமையில் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
அடுத்த வருடத்தில் பெரும்பாலும் கும்பாபிஷேகம் காணலாம். அதற்காக பக்தர்கள் மற்றும் பரோபகாரிகளின் நிதி அனுசரணையை நிர்வாகம் வேண்டி நிற்கின்றது.
வரலாறு:
இன்று பிள்ளையார் ஆலயமாக வழிபடப்பட்டாலும், இது ஆரம்பத்தில் சிவாலயமாகவே இருந்துள்ளது. கருவறையில் உள்ள மூல மூர்த்தி இன்றும் சிவலிங்க வடிவிலேயே காணப்படுவது இதற்கு சான்றாகும்.
கிறிஸ்துவிற்கு பின் ஆறாம் நூற்றாண்டில் அங்கு அரசாட்சி செய்து வந்த சிற்றரசனான சங்கமன் எனும் அரசன்தான் இந்த ஆலயத்தை கட்டியதாக கூறப்படுகிறது.
போர்த்துக்கேயர் காலத்தில் பண்டைய ஆலயம் அழிக்கப்பட்டு, அப்பகுதி காடாக மாறியது.
பின்னர் திரும்பி வந்த கிராம மக்கள் பழைய ஆலயத்தின் சிதைவுகளை தோண்டி எடுத்து, சற்று தள்ளி ஒரு திறந்தவெளியில் வைத்து வழிபட்டனர். விவசாயிகளும் மீனவர்களும் செங்கல் செங்கலாக கட்டி எழுப்பியதே இன்றைய ஆலயம்.
தற்போதைய கட்டமைப்பு பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் உருவானதாக நம்பப்படுகிறது.
மா, காட்டுத் தேங்காய், முதிரை, வேப்ப மரங்கள் சூழ, குரங்குகள் சூழ்ந்த இயற்கை சூழலில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. அடிக்கடி விநாயகர் ( யானை) வந்து செல்வது வழக்கம்.
ஆலயமருகே நூறு மீட்டர் தொலைவில் முனிவர் மயில்வாகனம் சுவாமிகளின் சமாதியுமுண்டு.ஆலய கிழக்கு சூழலில்
சங்குமண்கண்டி மலை உள்ளது. மலை உச்சியில் முருகப்பெருமான் மற்றும் சித்தர்களின் சிலைகளும் உள்ளன.
ஆலயத்தின் மேற்கே சிலகாததூரம் காட்டுக்குள் சென்றால் புராதன அமைவிடங்களை காணலாம். ஆனால் உள் செல்ல அனுமதி இல்லை.
இங்கு தினசரி பூஜை இல்லை. வெள்ளிக்கிழமைகளில் மட்டும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. விநாயகர் சதுர்த்தி, பொங்கல் காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காட்டு வழியே நடந்து வந்து வழிபடுவர்.
உகந்தை மற்றும் கதிர்காமம் செல்வோர் இங்கு வந்து தரித்து செல்வது வழமை.
மக்கள் நேர்த்தி வைத்து ட்ராக்டர் வான் போன்ற வாகனங்களில் வந்து பொங்கல் படைத்து தங்கி செல்வார்கள். தனிக் காட்டுக்குள் இருப்பதால் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.
“காட்டில் கைவிடப்பட்டாலும் கைவிடாத தெய்வம்” என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. கிழக்கின் வரலாற்றையும், இயற்கையையும், பக்தியையும் ஒருங்கே காட்டும் புனிதத் தலமாக இது விளங்குகிறது.
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா.
ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் & சிரேஸ்ட ஊடகவியலாளர்
காரைதீவு


