தம்பலகாமம் மாரியம்மன் கோவில் திருவிழா – 41 இளைஞர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் உடனடி கவனம் தேவை-இலங்கைத் தமிழரசுக் கட்சி – ஆயுள் கால உறுப்பினர்

குமார் ஜெயகுமரன்

திருகோணமலை தம்பலகாமம் மாரியம்மன் கோவில் திருவிழாவின் தீமிதிப்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக விறகு சேகரிக்கச் சென்றதாகக் கூறப்படும் 41 இளைஞர்கள் வனவள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி கவலையையும் பல முக்கியமான கேள்விகளையும் எழுப்பியுள்ளது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆயுள் கால உறுப்பினர் குமார் ஜெயக்குமரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் இன்று (10)மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

கிடைக்கப்பெறும் தகவல்களின்படி, குறித்த இளைஞர்கள் காட்டுப் பகுதிக்குச் செல்வதற்கு முன்னர் உரிய அதிகாரிகளிடம் எழுத்துமூலம் அறிவித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தின் முழுமையான பின்னணி, அனுமதி நடைமுறைகள் மற்றும் சட்டம் எவ்வாறு பிரயோகிக்கப்பட்டது என்பன தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளிப்படையான விளக்கத்தை வழங்குவது அவசியமாகும்.

தம்பலகாமம் மாரியம்மன் ஆலயத்தின் திருவிழாவும் அதனுடன் தொடர்புடைய பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளும் அப்பகுதி மக்களின் நீண்டகால சமய மற்றும் கலாசார பாரம்பரியத்துடன் நெருங்கிய தொடர்புடையவை. எனவே, சட்டத்தை மதிப்பதுடன் மக்களின் மத உரிமைகளையும் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளையும் பாதுகாப்பதும் அரசின் முக்கிய பொறுப்பாகும்.

அதேவேளை, எந்தவொரு மதத்தினருக்கும் எதிரான நிலைப்பாடு எமக்கில்லை. இலங்கையில் அனைத்து மதங்களுக்கும் சம உரிமை, சம மரியாதை மற்றும் சமமான சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே எமது தெளிவான நிலைப்பாடு.

ஒரு மதத்தின் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பாக மட்டும் தேவையற்ற தடைகள் அல்லது அதிகப்படியான கட்டுப்பாடுகள் ஏற்படுகின்றனவா என்ற சந்தேகம் மக்களிடையே உருவாகாத வகையில், சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் அனைத்து மதங்களையும் சமமான அணுகுமுறையுடன் கையாள வேண்டும்.

. கைது செய்யப்பட்டுள்ள 41 இளைஞர்கள் தொடர்பான சம்பவத்தின் முழுமையான உண்மை நிலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.
2. ஆலய நிர்வாகம் மற்றும் பக்தர்களின் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகள் சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறுவதற்குத் தேவையான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும்.
3. வனவளப் பாதுகாப்புச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்போது, மத மற்றும் கலாசார நிகழ்வுகளின் தன்மையும் உரிய முறையில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
4. எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாத வகையில், ஆலய நிர்வாகம், பிரதேச அதிகாரிகள், பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு இடையில் தெளிவான ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.
5. அனைத்து மதங்களுக்கும் சம உரிமை, சம மரியாதை மற்றும் சமமான சட்டப் பாதுகாப்பு நடைமுறையில் உறுதி செய்யப்பட வேண்டும்.

நாம் சட்டத்தை மதிக்க வேண்டும். அதே நேரத்தில், நியாயம், சமத்துவம் மற்றும் மத உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.

தம்பலகாமம் மாரியம்மன் ஆலய திருவிழா போன்ற பாரம்பரிய நிகழ்வுகள் மக்களின் சமய உணர்வுகளுடன் மட்டுமல்லாமல், அவர்களின் கலாசார அடையாளத்துடனும் தொடர்புடையவை. எனவே, இந்த விடயத்தை உணர்வுபூர்வமாகவும் நியாயமான முறையிலும் அணுகி, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.