பழைய மாவட்ட செயலகத்தில் பணியிட சீர்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

உயர்தரமான பொதுச் சேவையை உருவாக்கும் நோக்கில் பணியிட சீர்திருத்தம் மற்றும் சமூக உரையாடல் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் நேற்று (10) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

“Building a High-Quality Public Service Through Workplace Reform” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொது நிர்வாக அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் சாந்த வீரசிங்க மற்றும் கலாநிதி சுமனதாஸ் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட பணியிட மன்ற உறுப்பினர்களிடையே பணியிட சீர்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இப்பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது, பணியாளர்களின் பங்கேற்பை வலுப்படுத்துதல், தரமான பொதுச் சேவையை வழங்குவதற்கான மூலோபாய அணுகுமுறைகள் மற்றும் பணியிடங்களில் சமூக உரையாடலின் முக்கியத்துவம் தொடர்பில் விளக்கங்களும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

இதன் போது மூலோபாயக் கட்டமைப்பு மற்றும் நடைமுறைப்படுத்தல் திட்டம் (Strategic Framework & Implementation Blueprint) தொடர்பான விடயங்களும் பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

பணியிடங்களில் சிறந்த சமூக உரையாடலை உருவாக்கி, ஊழியர்களின் பங்களிப்பை வலுப்படுத்துவதன் ஊடாக மக்களுக்கு திறன்மிக்கதும் உயர்தரமானதுமான பொதுச் சேவையை வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம் என சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிகழ்விற்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), UNESCO, UNFPA மற்றும் இலங்கை SDG நிதியம் (Sri Lanka SDG Fund) உள்ளிட்ட நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்கியிருந்தன.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மாவட்டத்தில் புதிய பணியிட மன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் இவ் மன்ற உறுப்பினர்கள் மூலம் தொழிற்சங்க பிணக்குகளை சுமுகமாக தீர்ப்பதற்கான வழிவகை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.