வி.ரி.சகாதேவராஜா)
மனித அபிவிருத்தி தாபனம் , கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இயற்கை வேளாண்மை செயற்றிட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது.
அதன் அடிப்படையில் சேதன விவசாயம் பயிரிடலுக்கான சேதனப் பசளை தயாரித்தல் தொடர்பான பயிற்சி காரைதீவு 12ம் பிரிவில் வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு நேற்று முன்தினம் (7) வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
மனித அபிவிருத்தி தாபன உதவி இணைப்பாளர் எம்.ஐ. றியாழ் தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சிக்கு, வளவாளராக காரைதீவு விவசாய விரிவாக்கல் நிலையத்தின் பொறுப்பதிகாரியும், சிரேஸ்ட விவசாய போதனாசிரியருமா ன ஆர்.விஜயராகவன் கலந்து கொண்டு செய்முறை விளக்கமளித்தார்.
பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் பி. பிரணவரூபன் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு விவசாய ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ. நிக்ரோஸ் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர், பிரதேச செயலக கள உத்தியோகத்தர்கள், காரைதீவு 12 விவசாய அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
இயற்கை விவசாயம், உணவு பாதுகாப்பு, உணவு பதனிடுதல் மற்றும் சந்தைப்படுத்தல் மூலம் நிலையான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் மனித அபிவிருத்தி தாபனம் AEF இயற்கை வேளாண்மை வேலைத்திட்டத்தின் ஊடாக கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தோட்ட மற்றும் கிராமிய மக்களுக்கு இத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இத்திட்டத்தின் ஊடாக சுயதொழில் ஆர்வமுள்ளவர்களுக்கு இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிகொல்லிகளின் பயன்பாட்டை குறைத்து சுற்றுச் சுழலுக்கு பாதுகாப்பான மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு உகந்த விவசாய முறைகளை ஊக்குவிப்பதன் மூலம் பாதுகாப்பான உணவு உற்பத்தியை அதிகரிப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இச் செயற்றிட்டத்தின் கீழ் பயனாளிகளின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வுகளும் பல்வேறு உற்பத்தி துறைகளுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.


