எதிர்கால சந்ததினரை கலை உலகிற்குள் ஈர்த்துக் கொள்ளப்பட வேண்டும் பிரதேச செயலாளர் காந்திராசா காந்தீபன்

( வாஸ் கூஞ்ஞ) 09.08.2026

இந்த கலை மேடை ஒரே இடத்தில் மட்டும் அமையக்கூடாது மாறாக இந்த கலை அனைத்து பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டு எதிர்கால சந்ததினரை கலை உலகிற்குள் ஈர்த்து எடுக்கப்பட வேண்டும் என மன்னார் நகர் பிரதேச செயலாளர் காந்திராசா காந்தீபன் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் மன்னார் நகரம் பிரதேச செயலகமும் பிரதேச பண்பாட்டுப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த பண்பாட்டு விழா வெள்ளிக்கிழமை (07.08); மன்னார் நகர சபை மண்டபத்தில் இந்நிகழ்வுக்காக திறந்து வைக்கப்பட்ட தலைமன்னார் மேற்கு கலைஞர் அமரர் அந்தோனி அமலதாஸ் கூஞ்ஞ அரங்கில். நடைபெற்றது

இந்நிகழ்வுக்கு தலைமைதாங்கிய மன்னார் நகர் பிரதேச செயலாளர் காந்திராசா காந்தீபன் தனது தலைமை உரையில் மேலும் தெரிவிக்கையில்

மன்னார் நகர் பிரதேச செயலகத்தின் இந்த பண்பாட்டு விழா எனக்கு முதலாவது விழாவாக இருக்கின்றது. மன்னார் என்பது இது தனி பிரதேசமாக எடுத்துக்கொள்ள முடியாது. இங்கு பல இன மக்கள் பல மதங்கள் சார்ந்த மக்கள் வாழும் ஒரு இடமாக இது அமைந்துள்ளது.

இங்கு பல்வேறுபட்ட பண்பாட்டுள்ளவர்கள் ஒன்றிணைந்து சரியான நல்லிணம் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் இந்த மன்னார் தீவில் இருக்கின்றனர். இங்கு கடல் வளம் வரலாற்று சின்னங்கள் பாரம்பரிய வாழ்வியல் முறைகள் மனித நேயங்களால் சிறப்பிக்கப்பட்ட பண்புகள் கொண்ட இடமாக இது காணப்படுகின்றது.

எதிர்கால தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் கலைகள் இங்கு காணப்படுகின்றது. கலை என்பது எங்கும் வரையறுக்க முடியாதது. கலைத் திறன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறமுடியாததுதான் இந்த கலைகள்.

இந்த வகையில் நாம் தனித்துவமான கலைகளை இங்கு அடையாளப்படுத்தி வைத்துள்ளோம். இவ்வாறான செயல்பாட்டின் மூலம் கலைகள் மற்றவர்களுக்கும் சேர வேண்டும். இவ்வாறு எதிர்கால சமூதாயம் தனித்துவமான இந்த கலைகளை முன்னோக்கி பின்பற்றி வாழ வேண்டும் என்ற நோக்கிக்காகவே இந்த பண்பாட்டு விழாவை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

இசை நடனம் நாடகம் நாட்டுக்கூத்துக்கள் ஓவியம் இவ்வாறான இன்னோரான கலைகள் எமது மண்ணில் காணாமல் போகின்ற நிலை காணப்படுகின்றது. இருந்தும் ஒவ்வொருவருடன் ஒன்றிணைந்து அன்பு அமைதி தனித்துவமான தன்மைகள் இந்த மண்ணில் காணப்படுகின்றது.

இந்த அரங்கில் காணப்பட்ட கலைகள் மட்டும்தான் இங்குள்ள கலைகள் என கூற முடியாது. மட்டுப்படுத்தப்பட்ட கலைகள்தான் இந்த மேடையில் அரங்கேற்றப்பட்டது. இந்த பாரம்பரிய கலைகளையும் கலாச்சாரங்களையும் எமது இளம் சமூகத்திற்கு கொண்டு செல்லும் பொறுப்பு இன்றைய கலைஞர்களுக்கும் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் இருக்கின்றது.

இந்த கலை நிகழ்வுகளை இந்த மேடையில் மட்டும்தான் மேடையேற்ற வேண்டும் என்று இல்லாது அனைத்து கிராம மட்டங்களுக்கும் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்லப்பட வேண்டும்.

இந்த கலை பண்பாட்டு நிகழ்வுகளை நாம் மேலும் விரிவுப்படுத்தி கொள்ளுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம் என நாம் எம்மை உறுதிப்படுத்திக் கொள்வோம்.

இது தனியே அரசாங்க நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வு அல்ல. மாறாக இது கலை பண்பாட்டுக் குழுவினர் பண்பாட்டு பேரவை யாவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்பட்ட நிகழ்வாகும் என இவ்வாறு தெரிவித்தார்.