இந்திய அரசின் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 20 இலங்கை மாணவர்கள் இந்தியாவில் ஹிந்தி மொழி கற்கத் தேர்வு

ஹஸ்பர் ஏ.எச்-

இந்திய அரசின் “Propagation of Hindi Abroad” (வெளிநாடுகளில் ஹிந்தி மொழி பரப்பல்) உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், 20 இலங்கை மாணவர்கள் இந்தியாவில் ஹிந்தி மொழி பயிலத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இம்மாணவர்கள் 2026 ஆகஸ்ட் முதல் 2027 மே மாதம் வரை, இந்தியாவின் ஆக்ராவில் அமைந்துள்ள கேந்திரிய இந்தி சன்ஸ்தான் (Kendriya Hindi Sansthan – KHS) நிறுவனத்தில் நடைபெறும் 10 மாதக் கல்வித் திட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். இப்பயிற்சிக்கான விமானப் பயணம், கல்விக் கட்டணம் மற்றும் இந்தியாவில் தங்கியிருக்கும் காலத்திற்கான விருந்தோம்பல் செலவுகளை இந்திய அரசு முழுமையாக ஏற்கவுள்ளது.

2026 ஆகஸ்ட் 4ஆம் திகதி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்தியா புறப்படவிருந்த மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஆயிரமாண்டு பழமையான கலாசார, மொழி, இலக்கிய மற்றும் ஆன்மிக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் ஹிந்தி மொழி மற்றும் இலக்கியம் வகிக்கும் முக்கிய பங்கை அவர் வலியுறுத்தினார். மேலும், ஹிந்தி மற்றும் சிங்கள மொழிகளில் காணப்படும் சொற்களின் ஒற்றுமைகள் மற்றும் அவற்றின் தோற்றம் குறித்தும் அவர் விளக்கமளித்தார். இந்தியாவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து 5 பேர், ருஹுண பல்கலைக்கழகத்திலிருந்து ஒருவர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ பாலி வளாகத்திலிருந்து ஒருவர், அனுராதபுரம் ரஜரட்ட பல்கலைக்கழகத்திலிருந்து 3 பேர் மற்றும் களனிய பல்கலைக்கழகத்திலிருந்து 8 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கையில் ஹிந்தி மொழி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது புகழ்பெற்ற பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உட்பட சுமார் 100 கல்வி நிறுவனங்களில் ஹிந்தி மொழி கற்பிக்கப்படுகிறது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்த கலாசார மையம் (Swami Vivekananda Cultural Centre – SVCC) 2011ஆம் ஆண்டு முதல் இவ்வுதவித்தொகைத் திட்டத்தை ஒருங்கிணைத்து வருகிறது. கடந்த 14 ஆண்டுகளில், 200-க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் இந்த உதவித்தொகையின் மூலம் இந்தியாவில் ஹிந்தி மொழி கற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

ஹிந்தி மொழி, அதன் இலக்கியம் மற்றும் திரைப்படங்கள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஆயிரமாண்டு பழமையான நாகரிக மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் தொடர்ந்தும் முக்கிய பங்காற்றி வருகின்றன.