பாசிக்குடாவில் கடல்சார் மற்றும் கரையோர சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான உயர் மட்ட கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை வலுப்படுத்தி உள்ளூர் மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் பாசிக்குடாவில் கடல்சார் மற்றும் கரையோர சுற்றுலாத்துறையை அபிவிருத்தி தொடர்பான அரச உயர்மட்ட கலந்துரையாடல் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் தேசிய திட்ட இணைப்பாளர் ரமித்த விஜேதுங்க தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் பங்குபற்றுதலுடன் ஈஸ்ட் லகூன் மாநாட்டு மண்டபத்தில் நேற்று (05) நடைபெற்றது.

இதன் போது பாசிக்குடா மற்றும் அதனைச் சூழவுள்ள 10 கிலோமீட்டர் சுற்றளவிலான பிரதேசங்களை சுற்றுலா அபிவிருத்தி செய்வதன் அவசியம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினுடாக சீப்பா (Cepa) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் தரவுகள் தொடர்பாக அரச உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

மேலும் இத்திட்டத்தினுடாக 06 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 41 கிராம சேவகர் பிரிவுகளில் சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படவுள்ளது.

மேலும் மாவட்டத்தில் கடல்சார் மற்றும் கரையோர சுற்றுலாத்துறையை திட்டமிட்ட முறையில் மேம்படுத்துவதுடன் புதிய தொழில் முயற்சியாளர்களை இத்துறையில் இணைத்துக் கொண்டு வேலைவாய்ப்புகளையும் வருமான வாய்ப்புகளையும் அதிகரிப்பது தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அதிகாரிகளிடமிருத்து கருத்துக்களும் ஆலோசனைகளும் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பாகவும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் சமூக அடிப்படையிலான சுற்றுலா (Community-Based Tourism), கடல்சார் சுற்றுலா வளங்களைப் பயன்படுத்துதல், சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல், உள்ளூர் தொழில் முனைவோருக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் உள்ளூர் உற்பத்தியாளர்களினால் சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்தல் போன்ற பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.

பாசிக்குடா பிரதேசத்தில் சமூகப் பங்களிப்பை மையமாகக் கொண்ட சுற்றுலா வளர்ச்சியை ஏற்படுத்தி, அப்பகுதி மக்களுக்கு நிதி மற்றும் சமூக நன்மைகளை அதிகரிப்பது தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுடன் இதன் போது கலந்துரையாடல் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் சீப்பா (Cepa ) நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் பேராசிரியர் ஸ்ரீமல் அபேரத்ன, கலாநிதி ஜயஸ்ரீ, கலாநிதி திசாநாயக்க, பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், உயர் அதிகாரிகள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள், விதாதா உத்தியோகத்தர்கள், Cepa அதிகாரிகள், சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.