சமூகத்துக்குச் சேவையாற்றக் கூடியவாறு மாணவர்களை உருவாக்க வேண்டும் ஆளுநர் நா.வேதநாயகன்

( வாஸ் கூஞ்ஞ) 05.08.2026;

சமூகத்துக்குச் சேவையாற்றக் கூடியவாறு மாணவர்களை உருவாக்குவதில்தான் ஒரு கல்லூரியின் வெற்றி தங்கியிருக்கின்றது. கல்லூரிகள் மாணவர்களிடம் தலைமைத்துவப் பண்பையும் ஆளுமையையும் வளர்த்தெடுக்க வேண்டும்’ என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்தின் கீழ் 51.88 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப அலகு மற்றும் நூலகம் உள்ளிட்ட மூன்று மாடிக் கட்டடத் தொகுதியின் திறப்பு விழாவும்இ மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் 127.46 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பப் பிரிவுக்கான புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வும் கல்லூரியில் புதன்கிழமை (04.08.2026) பாடசாலை அதிபர் இ.புஸ்பரட்ணம் தலைமையில் இடம்பெற்றது.

விருந்தினர்கள் முறைப்படியே வரவேற்கப்பட்டுஇ முதலில் கட்டடத் திறப்பு விழாவும்இ அதனைத் தொடர்ந்து புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வும் இடம்பெற்றதைத் தொடர்ந்து மேடை நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் நா.வேதநாயகன் குறிப்பிடுகையில் தான் இக்கல்லூரியில் கற்ற காலத்தை நினைவுகூர்ந்ததுடன் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜாவும் தானும் ஒரே வகுப்பில் ஒன்றாகக் கல்வி கற்ற நண்பர்கள் என்பதைக் பெருமையுடன் குறிப்பிட்டார்.

தன்னை இந்நிலைக்கு உயர்த்திய இப்பாடசாலையின் ஆசிரியர்களையும் அதிபர்களையும் நன்றியுடன் நினைவு கூர்ந்த அவர் பௌதீக வளங்கள் எவ்வளவு முக்கியமோ அதைவிட மாணவர்களைச் சமூகத்துக்குச் சேவையாற்றும் முழுமையான ஆளுமைகளாக உருவாக்குவதே பாடசாலையின் உண்மையான வெற்றி என்றார்.

தற்போதைய அரசாங்கம் எதிர்காலத்திற்கேற்ற கல்வி முறைமையை உருவாக்குவதற்காக மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் மதிப்புமிகு பிரதம மந்திரி அவர்களின் வழிகாட்டலில் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஆளுநர் வடமாகாணத்தை அபிவிருத்தி செய்வதில் அரசாங்கம் கொண்டுள்ள ஈடுபாட்டைப் பயன்படுத்திப் பாடசாலையையும் மாகாணத்தையும் உயர்த்த அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.

போர் மற்றும் இடப்பெயர்வு காரணமாகப் பெரும் பின்னடைவுகளைச் சந்தித்திருந்த இப்பாடசாலை இன்று மீண்டெழுந்து நிற்பது போற்றத்தக்கது எனவும் சமூகம் போற்றும் பல மாணவர்களை இப்பாடசாலை தொடர்ந்து உருவாக்க வேண்டும் எனவும் வாழ்த்தி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்வில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் வலிகாமம் வடக்கு பிரதேச சபை கௌரவ தவிசாளர் சோ.சுகிர்தன் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜமுனா ராஜசீலன் பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.