மன்னாரில் வெளி மாவட்டங்களிலிருந்து வருவோர் மீதே டெங்கு அபாயம்.

( வாஸ் கூஞ்ஞ) 24.07.2026

நாட்டில் சில மாவட்டங்களில் தீவிரமாக டெங்கு பரவல் அபாயகரமாக காணப்பட்டபோதும் மன்னார் மாவட்டத்தில் டெங்கு அபாயம் பெரிதாக காணப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது. இருந்தபோதும் வெளி மாவட்டங்களிலிருந்து மன்னாருக்கு வருவோர் இத்தொற்றுடன் வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் இன்றுவரை 55 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டு சிகிச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இத்தொற்றாலர்கள் உள்ளுர்களில் இனம் காணப்படாதபோதும் இம்மாவட்டங்களிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு கல்விக்காகவும் தொழிலுக்காகவும் சென்று வந்தவர்களிடமே இந்நோய் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் மன்னார் பிராந்திய தொற்றுநோய் பிரிவு வைத்திய அதிகாரி கலைப்பிரியா தெரிவித்தார்.

யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியரின் ஆலோசனையைப் பெற்று இந்நோய்க்கான சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளும்படி மன்னார் பிராந்திய தொற்றுநோய் பிரிவு வைத்திய அதிகாரி கலைப்பிரியா மக்களுக்கு அறிவுரையும் வழங்கி வருகின்றார்.

இது இவ்வாறு இருந்தபோதும். மன்னார் மாவட்டத்தில் ஏனையோருக்கும் இந்நோய் தொற்றாதிருக்க பொது சௌக்கிய அதிகாரிகள் மூலமாக கிராமங்கள் தோறும் டெங்கு தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மன்னார் மாவட்டத்தில் அதிக சனத்தொகை கொண்ட பேசாலை பகுதியில் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகதிருக்க சுற்றாடல்களை பொது மக்கள் துப்பரவாக வைத்திருக்க வேண்டும் என்று வளர்கலை மன்றம் வீடு வீடாகவும் தெருக்களிலும் பொது சௌக்கிய சுகாதார அதிகாரிகள்- கிராம அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் இராணுவத்தினருடன் இணைந்து பரிசோதனை செய்து துப்பரவு செய்யும் பணிகளையும் முன்னெடுத்து வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.