அபு அலா
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஒழுக்கக் கட்டுப்பாடுகளை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த
கட்சியின் முக்கிய உறுப்பினரான எஸ்.எல்.ஏ.ஹலீமின் கட்சி உறுப்பினர் உரிமை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஒழுக்காற்று நடவடிக்கைக்கான ‘காரணம் கேட்கும் அறிவித்தல் கடிதம் ஒன்றை இன்று (24) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிஸாம் காரியப்பரினால் அனுப்பப்பட்டுள்ள உத்தியோகபூர்வ கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 2026 ஜூலை 22 ஆம் திகதி அட்டாளைச்சேனையில் நடைபெற்ற ‘டெங்கு அற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி’ எனும் திட்டத்திற்கான முதற்கட்ட கூட்டத்தின்போது, எஸ்.எல்.ஏ.ஹலீம் அவர்களின் செயற்பாடுகள் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்ததாகக் கட்சித் தலைவரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
இதன் அடிப்படையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியலமைப்பு மற்றும் ஒழுக்காற்று விதிமுறைகளுக்கு அமைவாக ஏன் உங்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது என்பதற்கான எழுத்துப்பூர்வ விளக்கத்தை, இக்கடிதம் கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கட்சித் தலைவர் பணித்துள்ளார் என்று அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்படுள்ளது.
மேலும், இது தொடர்பான ஒழுக்காற்று விசாரணை முடிவடையும் வரை, கட்சி உறுப்பினர் உரிமை உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தகுந்த விளக்கத்தை அளிக்கத் தவறும்பட்சத்தில், கட்சி விதிமுறைகளின்படி அடுத்த கட்ட மேலதிக நடவடிக்கைகள் தொடரப்படும் என்றும் அக்கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.


