கபில சந்திரசேன மரணம்: கைப்பற்றப்பட்ட மர்ம மருந்துகள் குறித்த அறிக்கை சமர்ப்பிக்க அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு நீதிமன்றம் நினைவூட்டல்

கொழும்பு: முன்னாள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணையில், சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட அடையாளம் காணப்படாத மருந்துப் பொருட்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு நினைவூட்டல் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (8) கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு (CCD) அதிகாரிகள், உயிரிழந்தவரின் சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட அடையாளம் காணப்படாத பல்வேறு மருந்துப் பொருட்களின் மாதிரிகள் அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தாலும், அதற்கான அறிக்கைகள் இதுவரை கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மேலும், உயிரிழந்தவரின் உடற்கூறு பரிசோதனை அறிக்கையும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிவித்தனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட மருந்துப் பொருட்கள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவாக சமர்ப்பிக்குமாறு அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு நினைவூட்டல் கடிதம் அனுப்ப நீதவான் உத்தரவிட்டார்.

அதேவேளை, உடற்கூறு பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதிமன்ற சட்ட மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கும் நினைவூட்டல் கடிதம் அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, விசாரணையின் முன்னேற்றத்தை பரிசீலிப்பதற்காக வழக்கு எதிர்வரும் ஜூலை 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.