கொழும்பு: போலி ஆவணங்கள் தயாரித்து காணிகளை சட்டவிரோதமாக மாற்றியமைத்ததாகக் கூறப்படும் விசாரணை தொடர்பில், கொழும்பு பிராந்திய காணிப் பதிவாளர் அலுவலகமொன்றில் பணியாற்றிய பெண் காணிப் பதிவாளர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
சிஐடியின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த பெண் அதிகாரி காணி உறுதிப்பத்திரங்களின் இரண்டாம் பிரதிகள் மற்றும் பதிவேட்டு ஆவணங்களை வெளிநபர்களுக்கு வழங்கியதாகவும், அதன் மூலம் சட்டபூர்வ உரிமையாளர்களுக்கு எதிராக போலி ஆவணங்கள் தயாரித்து காணிகளை சட்டவிரோதமாக மாற்றியமைக்கும் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர் பன்னிப்பிட்டியைச் சேர்ந்த 51 வயதுடைய பெண்ணாவார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.


