அரசுப் பணம் முறைகேடாக பயன்படுத்தியதாக வழக்கு: ரணில், சமன் ஏக்கநாயக்க மீதான வழக்கு செப்டம்பர் 30க்கு ஒத்திவைப்பு

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக அரசுப் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (8) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள், விசாரணைகள் நிறைவடைந்து சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

இதனை உறுதிப்படுத்திய அரசின் மூத்த சட்டத்தரணி, சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் முன்வைப்பதற்காக மற்றுமொரு திகதியை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையில், ரணில் விக்கிரமசிங்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி, சர்ச்சைக்குரிய செலவினங்களில் சுமார் பாதித் தொகை வாகனங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார். எனினும், அந்த வாகனங்கள் பிரித்தானிய அரசால் வழங்கப்பட்டவை எனக் கூறி, அதனை உறுதிப்படுத்தும் ஆவணத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, இது தொடர்பில் மேலதிக விசாரணை நடத்துமாறு கோரினார்.

இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த நீதவான், சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை செப்டம்பர் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிவிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை அன்றைய தினம் வரை ஒத்திவைத்தார்.

2023 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதியின் மனைவியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தனிப்பட்ட பிரித்தானியா பயணத்தின் போது, ரூ.16.6 மில்லியனுக்கும் அதிகமான அரசுப் பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, ரணில் விக்கிரமசிங்க மற்றும் சமன் ஏக்கநாயக்க ஆகியோரை சந்தேகநபர்களாகக் குறிப்பிடி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.