அதன்படி, குறித்த சம்பவம் தொடர்பான அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்துள்ளதாகவும், அதற்கான கோப்புகள் சட்ட மாஅதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது. சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கமைய குறித்த வழக்கினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டார்.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன, பயணச் செலவில் பாதியளவு போக்குவரத்துக்கு செலவிடப்பட்டதாகவும், போக்குவரத்து வசதியை பிரித்தானிய அரசாங்கமே மேற்கொண்டதாகவும் தெரிவித்து, அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் மீது, அரச நிதியைப் பயன்படுத்தி தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டமை மற்றும் 1.5 கோடி ரூபாவிற்கும் அதிகமான நஷ்டத்தை அரசுக்கு ஏற்படுத்தியமை தொடர்பில் இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


