லண்டன், ஜூலை 7: வெளிநாட்டில் செயல்படும் ஒரு வாடகைத் தாய் (Surrogacy) சேவை நிறுவனம், தவறுதலாக வேறு நபரின் விந்தணுவைப் பயன்படுத்தி இரட்டைக் குழந்தைகளை உருவாக்கியதால், அந்தக் குழந்தைகளுக்கும் தங்களுக்கும் உயிரியல் (Biological) தொடர்பே இல்லை என்பதை அறிந்த இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதியர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நீதிமன்ற ஆவணங்களில் PP மற்றும் QQ என குறிப்பிடப்பட்டுள்ள இந்தத் தம்பதியர், குழந்தைகளுக்கு பிரிட்டிஷ் குடியுரிமை பெற விண்ணப்பித்தபோது மேற்கொள்ளப்பட்ட டி.என்.ஏ. பரிசோதனையில், குழந்தைகளுக்கு தந்தையுடன் எந்த உயிரியல் தொடர்பும் இல்லை என்பது தெரியவந்தது.
இந்தத் தம்பதியர் பயன்படுத்திய இலங்கையைச் சேர்ந்த வாடகைத் தாய் சேவை நிறுவனம், ஆரம்பத்தில் கருவுகள் (Embryos) தந்தையின் விந்தணுவைப் பயன்படுத்தியே உருவாக்கப்பட்டதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்திருந்தது. பின்னர், “தேவைப்பட்டால் தானம் செய்யப்பட்ட (Donor) விந்தணுவைப் பயன்படுத்தலாம்” என்ற ஒப்புதல் படிவத்தில் தம்பதியர் கையெழுத்திட்டிருந்ததாக நிறுவனம் கூறியது. ஆனால், இதை தம்பதியர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
குழந்தைகளின் தாய், “டி.என்.ஏ. பரிசோதனை முடிவு எங்களை இடிமுழக்கம் போல் தாக்கியது. இருந்தாலும், அந்தக் குழந்தைகள் எங்களுக்காகவே பிறந்தவர்கள் என்ற உணர்வுடன் அவர்களை பாதுகாத்து வீட்டிற்கு அழைத்து வரவே விரும்பினோம்” என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதன் காரணமாக, வாடகைத் தாயிடமிருந்து சட்டப்பூர்வ பெற்றோர் உரிமையைப் பெறும் Parental Order மனுவை அவர்கள் திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்குப் பதிலாக, குழந்தைகளை சட்டப்பூர்வமாகத் தத்தெடுக்க (Adoption Order) விண்ணப்பித்தனர். அந்த மனுவை நீதிமன்றம் அனுமதித்தது.
கடந்த வாரம் தீர்ப்பளித்த நீதிபதி, இந்தத் தம்பதியர் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், குழந்தைகளை மிகுந்த அன்புடன் வளர்க்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார். விந்தணு மாற்றம் அலட்சியத்தால் நடந்த தவறா அல்லது வேறு காரணத்தால் திட்டமிட்டு செய்யப்பட்டதா என்பது தெளிவாகவில்லை என்றும் அவர் கூறினார்.
திருமணத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் குழந்தைப் பேறு இல்லாமல் தவித்த இந்தத் தம்பதியர், பலமுறை IVF சிகிச்சை மேற்கொண்டனர். இந்தியாவில் மேற்கொண்ட சிகிச்சையின் மூலம் பிறந்த இரட்டைக் குழந்தைகள், உடல்நலக் குறைபாடுகளால் சில நாட்களிலேயே உயிரிழந்தன. அதன் பின்னர், மீண்டும் கர்ப்பம் தரிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, குடும்ப நண்பர் ஒருவர் வாடகைத் தாயாக முன்வந்ததைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள Wish Fertility என்ற நிறுவனத்தின் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்நிறுவனம், தானம் செய்யப்பட்ட முட்டைகள் மற்றும் தந்தையின் விந்தணுவைப் பயன்படுத்தியே கருவுகள் உருவாக்கப்பட்டதாக உறுதி அளித்திருந்தது.
ஆனால், பிரிட்டிஷ் குடியுரிமை விண்ணப்பத்தின் போது நடத்தப்பட்ட டி.என்.ஏ. பரிசோதனையில், குழந்தைகளுக்கும் தந்தைக்கும் உயிரியல் தொடர்பு இல்லை என்பது உறுதியானது. பின்னர், குழந்தைகளுக்கு பிரிட்டிஷ் குடியுரிமை வழங்கப்பட்டது.
நிறுவனம், தந்தையின் விந்தணுவுடன் சேர்த்து தானம் செய்யப்பட்ட விந்தணுவும் பயன்படுத்தப்பட்டதாகவும், எந்த விந்தணுவிலிருந்து கரு உருவானது என்பதை பின்னர் கண்டறிய முடியாது என்றும் விளக்கம் அளித்தது.
ஆனால், இந்த விளக்கத்தை நீதிபதி நிராகரித்தார். உயிரியல் தொடர்பு இல்லாத இரு வேறு குழந்தைகள் பிறந்திருப்பதால், தந்தையின் விந்தணு பயன்படுத்தப்படவில்லை என்பதே அதிக சாத்தியம் என அவர் குறிப்பிட்டார். மேலும், தானம் செய்யப்பட்ட விந்தணுவைப் பயன்படுத்த தம்பதியர் ஒப்புதல் அளித்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்றும், தந்தையின் விந்தணுவில் குறைபாடு இருந்ததாகவும் எந்த பதிவும் இல்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இந்தச் சம்பவம், வெளிநாடுகளில் நடைபெறும் வாடகைத் தாய் மற்றும் கருவுறுதல் சிகிச்சைகளில் தரக் கட்டுப்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டப் பொறுப்புகள் குறித்து மீண்டும் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.


