07.07.2026 செவ்வாய் கிழமை களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பாடசாலையொன்றின் சிற்றுண்டிசாலையிற்கு ( Canteen ) கொண்டு செல்வதற்கு சுகாதார சீர்கேட்டுடனும் லஞ்சீற் பயன்படுத்தி அவித்த இட்லிகள் களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகரால் கைப்பற்றப்பட்டு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு அழிக்கப்பட்டது.
இட்லி அவிக்கும் போது லஞ்சீற் (Lunch sheet) பயன்படுத்துவது இன்றைய காலத்தில் பல இடங்களில் காணப்படுகிறது. இது வேலையை இலகுவாக்கினாலும், ஆரோக்கியத்திற்குப் பல தீமைகளை விளைவிக்கும். நச்சு இரசாயனங்கள் வெளியேறுதல். பிளாஸ்டிக் தாள்கள் பொதுவாக பாலிதீன் (Polyethylene) அல்லது அது போன்ற இரசயான பொருட்களால் ஆனவை. இட்லி அவிக்கும் போது ஏற்படும் அதிக வெப்பநிலையில், பிளாஸ்டிக்கில் உள்ள பிஸ்பெனால் ஏ (BPA) மற்றும் தாலேட்டுகள் (Phthalates) போன்ற நச்சு இரசாயனங்கள் உருகி உணவோடு கலக்கின்றன.
ஹார்மோன் குறைபாடுகள் உணவில் கலக்கும் இந்த இரசாயனங்கள் உடலுக்குள் செல்லும் போது, அவை நம் உடலின் இயற்கையான ஹார்மோன் செயல்பாடுகளைப் பாதிக்கின்றன. இதனால் தைராய்டு பிரச்சினைகள், ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் குழந்தைகளில் வளர்ச்சிப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
உடலுறுப்புக்கள் பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் வேதிப்பொருட்கள் கலந்த உணவை உட்கொள்வது காலப்போக்கில் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகளைப் பாதிக்கும். புற்றுநோய் அபாயம் தொடர்ச்சியாக வெப்பப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் தாளில் சமைத்த உணவை உண்பது, நீண்ட காலத்தில் புற்றுநோய் கலங்கள் உருவாவதற்கான காரணியாக அமையலாம் என மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
சுவை மற்றும் மணம் மாறுதல் பிளாஸ்டிக் தாளில் அவிக்கும் போது, பிளாஸ்டிக்கின் ஒருவித வாசனை இட்லியில் ஒட்டிக்கொள்ளும். இது உணவின் இயற்கையான சுவையைக் குறைப்பதோடு, ஆரோக்கியமற்ற வாசனையையும் தருகிறது.
சிறந்த மாற்று வழிகள் பருத்தித் துணி (Cotton Cloth) பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் மெல்லிய பருத்தித் துணியே மிகவும் பாதுகாப்பானது. இது ஆவி சீராக ஊடுருவவும், இட்லி மென்மையாக இருக்கவும் உதவுகிறது.
வாழை இலையில் இட்லி அவிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. இது இட்லிக்கு ஒரு தனித்துவமான மணத்தையும், மருத்துவ குணங்களையும் தருகிறது. இட்லித் தட்டில் சிறிதளவு நெய் அல்லது நல்லெண்ணெய் தடவி நேரிடையாக அவிப்பது சிறந்தது.
வேலையை விரைவுபடுத்த பயன்படுத்தும் “லஞ்சீற்” மெல்ல மெல்லஸகொல்லும் விஷமாக மாறியுள்ளது. எனவே, மீண்டும் பாரம்பரிய துணி அல்லது இலை முறையைப் பின்பற்றுவது ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்தது.






