மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது கண்ணகி அம்பாளின் திருச்சடங்கானது சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிரதேச சபையின் கூட்டத் தொடரின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு ஆலயங்களுக்கு தவிசாளர் அவர்கள் களவிஜயம் மேற்கொண்டார். கடந்த சபை கூட்டத்தின் போது எதிர்வரும் காலங்களில் ஆலயங்களில் திருவிழாக்கள் மற்றும் சடங்குகள் நடைபெறுகின்ற ஆலயங்களில் ஒரு கிலோ மிட்டாயின் விலை 700 ரூபாயாக அமையப் பெற வேண்டும் என சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதை அவதானிக்கும் பொருட்டு ஆலயங்களுக்கு சென்றிருந்தார். அதனோடு இணைந்த வகையில் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற சேவைகள் ஆலயங்களுக்கு பொருத்தமான வகையில் சிறப்பாகவும் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதை கண்காணிக்கும் வகையிலும் தவிசாளர் அவர்கள் ஆலயங்களுக்கு களவிஜயம் மேற்கொண்டு அவதானித்ததோடு ஆலயங்களில் சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற சேவைகளில் குறைபாடுகள் காணப்பட்டால் உடன் நிவர்த்திக்குமாறு அதிகாரிகளை பணித்ததுடன் கடைகளில் 700 ரூபாய்க்கு மிட்டாய்களை விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதுடன் அதிக அளவில் நில வாடகை அறவிடப்படுமாயின் அவற்றை குறைத்து மிட்டாய் விலையினை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்து மக்களுடைய நுகர்வு தன்மையை பேணுமாறும் அறிவுறுத்தப்பட்டது. இதன்போது ஆலய நிர்வாகங்களை அழைத்து தமது பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறும் நடைமுறைப்படுத்த தவறும் பட்சத்தில் கடைக்காரர்களை அணுகி நடைமுறைப்படுத்துவதற்கு பணிக்குமாறும் வேண்டிக்கொண்டார்.


