ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து எமது கடும் கவலையையும் எதிர்ப்பையும் வெளியிடுகின்றோம்.
விகாரைகளில் விநய ஒழுக்கக் கட்டுப்பாடுகளைப் பேணுவதற்கும், தர்ம நீதிமன்றங்கள் மூலம் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரத்தை மகா சங்கத்தினருக்கு மீண்டும் வழங்குவதற்கும் புதிய சட்டங்களை கொண்டு வரப்படவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மூலம் பௌத்தத்திற்கு மட்டும் முன்னுரிமை இல்லை அவர்களால் இழைக்கப்படும் குற்றச் செயல்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் போல் உள்ளது.
நாட்டில் உள்ள அரசியல் யாப்பில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது .ஆனாலும் அந்த சட்ட நீதி நியாயங்களுக்கு அப்பாலும் தங்களுக்கு சலுகைகள் வேண்டும் என்று கேட்கும் மகாசங்கங்களின் கலாச்சாரத்தினை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது. சட்டங்களிலும் சலுகையை எதிர்ப்பார்க்கும் நிலையை எண்ணி நாம் வெட்கி தலைகுணிய வேண்டி யுள்ளது.
இத்தகைய சலுகையை வேண்டி நிற்போருக்கு ஆதரவாக இந்த நாட்டின் ஜனாதிபதியும் தனது கருத்தினை வெளியிட் டுள்ளார் என்பது இன்னும் கவலையாக உள்ளது.
இந்த ஆட்சியாளர்கள் சட்டம் ஒழுங்கை எல்லோருக்கும் ஒரே மாதிரி பிரயோகிப்பார்கள் என்று நாம் எல்லோரும் எதிர்பார்த்தோம். ஆனால் அதற்குள்ளும் விதிவிலக்குகளை ஏற்படுத்த முயல்வது மிகவும் வேடிக்கையானது.
நாட்டில் சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானதாக இவை உள்ளது.
பௌத்த மதத்திற்கு ஏற்கனவே இந்நாட்டில் பல்வேறு சலுகைகளும் சட்டத்தின் மூலமான அங்கிகாரமும் பாதுகாப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. ஏனைய மதங்களுடன் ஒப்பிடுகையில் அவர்களது தனிச்சலுகை வாய்ந்த நிலையை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மேலும் விசேட சட்ட பாதுகாப்புகளை வழங்க முயற்சிப்பது, இந்த நாட்டில் பௌத்த மேலாதிக்க பேரினவாத அரசியலை வலுப்படுத்தும் அபாயகரமான முன்னெடுப்பாக உள்ளது.
மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிராக போராடிய கத்தோலிக்க அருட்தந்தை ஒருவர் மீது இலங்கை காவல்துறை எவ்வாறு நடந்து கொண்டது என்பதை முழு நாடும் அறியும்.
அதேபோன்று தையிட்டி பிரச்சினையின் போது இந்து மதகுரு ஒருவர் எப்படியான வன்முறைமூலம் கைது செய்யப்பட்டார் என்பதும் எமது நினைவில் உள்ளது.
ஆனால் பௌத்த துறவிகள் தொடர்பில் மட்டும் தனிச்சட்ட நடைமுறைகள் மற்றும் பாதுகாப்புகள் உருவாக்கப்படுவது, இந்த நாட்டின் சட்ட ஒழுங்கில் சமத்துவம் இல்லை என்பதனை தற்போதைய ஆட்சியாளர்களும் நிரூபிக்க தொடங்கியுள்ளனர் என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக்காலங்களில் சில பௌத்த துறவிகள் தொடர்பாக எழுந்துள்ள போதைப்பொருள் குற்றச்சாட்டுகள்,பாலியல் குற்றச் சாட்டுக்கள், வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அரசியல் தலையீடுகள் குறித்து மக்கள் மத்தியில் கடுமையான கேள்விகளும் விமர்சனங்கும் எழுந்துள்ளன.
இந்நிலையில் பொதுவான நீதித்துறைக்கு பதிலாக “தர்ம நீதிமன்றங்கள்” என்ற தனித்துவமான அமைப்புகளின் மூலம் நடவடிக்கை எடுக்க முயற்சிப்பது வெளிப்படைத்தன்மையையும் நீதியின் சுயாதீனத்தையும் குழி தோண்டி புதைப்பதற்கு சமன்.
மேலும், மைலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினையை பார்வையிட சென்ற எமது சர்வமத குழுவினரிடம் அங்கிருந்த ஒரு பௌத்த துறவி அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவமும் எமக்கு மறக்க முடியாத ஒன்றாகும். இத்தகைய சம்பவங்கள் நாட்டில் மத நல்லிணக்கத்தை பாதிக்கும் சூழ்நிலையை ஏற்கனவே உருவாக்கியுள்ளன.
“ஒரே நாடு – ஒரே சட்டம்” என்று அடிக்கடி கூறிவரும் இந்த அரசு, நடைமுறையில் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கும் அதன் துறவிகளுக்கும் மேலதிக சட்ட சலுகைகளை வழங்க முனைவது மிகுந்த முரண்பாடான செயல் ஆகும். இது நாட்டின் நல்லிணக்கத்தையும் ஜனநாயகத்தையும் பாதிக்கும் அபாயத்தை கொண்டுள்ளது.
எனவே, அரசானது எந்த மதத்திற்கும் விசேட சட்ட அந்தஸ்து வழங்குவதை நிறுத்தி அனைத்து மதங்களையும் சமமாக மதித்து, நாட்டின் சட்ட ஒழுங்கை அனைவருக்கும் சமமான விதமாக அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
அருட்தந்தை ம. லூக் ஜோன்
தலைவர்
சர்வ மத ஒன்றியம்
மட்டக்களப்பு


