இந்திய துணை உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டேவுக்கு பிரியாவிடை வரவேற்பு

இலங்கைக்கான இந்தியாவின் துணை உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே அவர்களது சேவைக்காலம் நிறைவுறுவதை முன்னிட்டு, அவருக்கு விடைபகரும் வகையிலான பிரியாவிடை வரவேற்பு நிகழ்வு கொழும்பில் உள்ள ITC Ratnadipa ஹோட்டலின் ‘Sangam Ballroom’ மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் அரசியல், தூதரக, வர்த்தக மற்றும் சமூகத் துறைகளைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். குறிப்பாக, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான M.A. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.

கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே அவர்கள் இலங்கையில் பணியாற்றிய காலப்பகுதியில், இலங்கை – இந்திய உறவுகளை மேலும் பலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியிருந்தார். குறிப்பாக, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க பணிகள் இதன்போது நன்றியுடன் நினைவு கூரப்பட்டன. அவரது பணிக்காலத்தில் உருவாக்கப்பட்ட இருதரப்பு ஒத்துழைப்புகளும் நல்லிணக்க முயற்சிகளும் இரு நாட்டு மக்களுக்கும் நீண்டகாலப் பயனை அளிக்கும் வகையில் அமைந்துள்ளன என நிகழ்வில் கலந்துகொண்டோர் சுட்டிக்காட்டினர்.

இந்த விடைபெறும் நிகழ்வானது, கலந்துகொண்ட பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்களுக்கிடையில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மேலும் பல புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் ஒரு முக்கிய தளமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிறைவாக, இலங்கைக்கான தனது தூதரகப் பணியை நிறைவு செய்து புதிய பயணத்தைத் தொடரவுள்ள கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே அவர்களின் எதிர்காலப் பொறுப்புகளுக்கும், புதிய பணிகளுக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரமுகர்கள் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.