(சுமன்)
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உழைப்பாளர் தின நிகழ்வு கட்சியின் பட்டிப்பளைப் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில், நேற்று மண்முனை தென்மேற்கு, பட்டிப்பளை மண்ணில் அமைந்துள்ள வைரவர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
இதன் போது கொக்கட்டிச்சோலை சந்தியிலிருந்து தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தும் வகையில் முச்சக்கர வண்டிகள், உழவு இயந்திரங்கள் பேரணியாகவும் மற்றும் மீனவர்கள் தமது படகுகளை உழவு இயந்திரங்களில் அணிவகுப்பாக கொண்டும் உழைப்பாளர் தின பேரணி ஊர்வலம் கோஷங்களுடனும் பல்வேறு பதாகைகளை ஏந்திய வகையில் பட்டிப்பளை விளையாட்டு மைதானம் வரையில் முன்னெடுக்கப்பட்டது.
பேரணியைத் தொடர்ந்து குறித்த மைதானத்தில் உழைப்பாளர் தின நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன்போது தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிப முன்னணியினர் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளால் உழைப்பாளர் தின பிரகடன உரைகள் நிகழ்த்தப்பட்டன.
தொடர்ந்து தமிழர் கலை, கலாசார மற்றும் பாரம்பரிய விழுமியங்களை பறைசாற்றும் வகையில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களையும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் பிரதிபலிக்கும் வகையில் இந் நிகழ்வு, அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர், இ.சிறிநாத், ஞா.சிறிநேசன், இரா.சாணக்கியன், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிப முன்னணி உறுப்பினர்கள், மகளிர் அணி உறுப்பினர்கள், கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளை, பிரதேசக் கிளைகளின் உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள், தமிழ்த் தேசியப் பற்றாளர்கள், உணர்வாளர்கள், சமூக ஆர்வலர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் திரண்டு வந்து தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.


