(சுமன்)
தமிழ்த் தேசிய விடுதலைப் பாடகர் பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பாவின் மறைவையொட்டி அவருக்கான புகழ்வணக்க நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் தாயக செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
தாயக செயலணியின் இணைப்பாளர் இ.செல்வகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத், மண்முனை பிரதேச சபைத் தவிசாளர் த.கோபாலப்பிள்ளை, ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் பிரபாகரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ், சிவில் செயற்பாட்டாளர்களான எஸ்.சிவயோகநாதன், திருமதி ரஜனி, தாயக செயலணி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மூத்த உறுப்பினர் பா.சின்னத்துரை அவர்களினால் தேனிசை செல்லப்பா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, வருகை தந்தோரால் ஈகைச் சுடரேற்றப்பட்டு மலரஞ்சலியுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்கள் தன் குரல் வளத்தால் தமிழ்த் தேசியத்திற்கும் ஈழவிடுதலைப் போரட்டத்திற்கும் ஆற்றிய இசை ஒத்துழைப்புகளை தங்கள் புகழ் அஞ்சலியுரையில் ஆற்றியதுடன், தற்கால இளைஞர்கள் இத்தகையோரின் அர்ப்பணிப்புகளை உணர்ந்து நடக்க வேண்டும் என்ற வேண்டுகோள்களையும் முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.


