எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் குழுவின் விசேட கூட்டம் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் தலைமையில் இன்று (26) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மீளாய்வு
இதன்போது, 2026ஆம் ஆண்டில் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் வி. நவநீதன் அவர்களினால் மீளாய்வு செய்யப்பட்டது.
2026ஆம் ஆண்டில் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்ட 205 கருத்திட்டங்களில் 192 வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன், அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் தற்போதைய முன்னேற்ற நிலை குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதிகளை மேய்ச்சல் தரைகளாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்துதல், முந்தனை ஆறு அபிவிருத்தித் திட்டம், கிரான், பொண்டுகள்சேனை, மண்டூர் – குருமண்வெளி மற்றும் பட்டிருப்பு உள்ளிட்ட முக்கிய பாலங்களின் நிர்மாணம் ஆகியன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், காட்டு யானை – மனித மோதல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், செங்கலடி – பதுளை வீதியில் யானை வேலி அமைத்தல், மட்டக்களப்பு வாவியைப் பாதுகாத்தல், வாழைச்சேனை துறைமுக அபிவிருத்தி, மட்டக்களப்பு சிறைச்சாலையை இடமாற்றுதல், போதனா வைத்தியசாலையை விரிவுபடுத்துதல் மற்றும் மாவட்டத்தின் குடிநீர் விநியோகத்தை அதிகரித்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், கால்நடை வளர்ப்பு, வீடமைப்பு, வீதி அபிவிருத்தி, பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கும் திட்டம், நன்னீர் மீன் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர், மாவட்டத்தில் புதிய தொழில் முயற்சிகளை மேம்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
அத்துடன், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், 2027ஆம் ஆண்டில் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்டத்தின் முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், கிழக்கு மாகாண செயலக உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், முப்படைகளின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


