(சுமன்)
தமிழ் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்தாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் போதகர் லூக் அடிகளார் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் க.குககுமாரராசா, வெல்லாவெளி இணைப்பாளர் பா.குமாரசிங்கம் உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள், மாவீரர் குடும்ப உறவுகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாவீரர் தின நினைவாகக் கார்திகைபூ பொது சின்னத்தை கொண்ட புகைப்படம் மாவீரர் பெற்றோர் குடும்ப உறவுகள் சகிதம் மேள வாத்தியங்க உட்பட கலாசார வாத்தியங்கள் முழங்க மகிழடித்தீவு சந்தியில் இருந்து ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு, மாவீரரின் தாயொருவரால் பொதுச்சுடரேற்றப்பட்டதுடன், மாவீரர் குடும்ப உறவுகள் அனைவராலும் சுடரேற்றப்பட்டு, நினைவுப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி மாவீரர் குடும்பத்தினரின் அழுகையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நினைவுரைகள் ஆற்றப்பட்டு பெற்றோர்களைக் கௌரவிக்கும் முகமாக அவர்களுக்குப் பழக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், மதிய போசனமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




