கல்லடி நொச்சிமுனையைச் சேர்ந்த முன்னாள் போராளியான தே.தேவகுமாரன் என்பவரின் மகளான தேவகுமாரன் லக்சானியா என்பவர் கடந்த ஐப்பசி மாதம் 26ம் திகதியில் இருந்து காணமால் போனமை தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் இல்லாத நிலையில் பொலிஸ் நடவடிக்கைகளும் துரிதம் இல்லை என்ற விடயத்தினையும் சுட்டிக்காட்டி இன்றைய தினம் ஊடக சந்திப்பினை மேற்கொண்டிருந்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
கடந்த ஐப்பசி மாதம் 26ம் திகதி அரசடி ஐ.டி.எம்.கெம்பஸில் கல்வி கற்றுவரும் நிலையில் குறிப்பிட்ட தினம் காலை வகுப்பிற்கு விட்டுவந்து மீண்டும் மதியம் அழைத்துவரச் சென்ற போது அவர் அங்கு இல்லை. அதன் பின் காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற போது சம்பவம் இடம்பெற்றது மட்டக்களப்பு என்பதால் மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யச் சொன்னார்கள். அதன்படி அங்கு முறைப்பாட்டு பதிவிட்டோம். அந்த அடிப்படையில் பொலிஸாரால் எனது மகளுடன் கல்வி கற்பவர்கள், தோழர்களை விசாரித்து, சி.சி.டி.வி கெமரா என்பனவும் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. நாமும் எமக்குத் தெரிந்த வழிகளில் எல்லாம் முயற்சிகள் செய்துவிட்டோம்.
இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கும் தெரிவித்து ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக பொலிஸ்மா அதிபருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனினும் தீவிர விசாரணைகள் எதுவும் இடம்பெறுவதாகத் தெரியவில்லை. அந்த நிலையிலேயே ஊடகம் வாயிலாக இன்று வந்துள்ளோம்.
எங்களுக்கு எங்கள் பிள்ளையைக் கண்டுபிடித்துத் தருவதற்கு துரித நடவடிக்கைகள் ஏதும் எடுக்க வேண்டும். மட்டக்களப்பில் அண்மையிலும் ஒரு பிள்ளையைக் காணவில்லை என்ற தகவலும் எங்களுக்கு மேலும் பயத்தை ஏற்படுத்துகின்றது. காலமும் கடந்து போகிறது. எமது பிள்ளை ஒரு வாழ்க்கையைத் தேடி சென்றிருந்தால் இத்தனை காலத்திற்கு எமக்கு ஏதோவொரு வழியில் தெரிய வந்திருக்கும்.
எனவே பொலிஸார் தீவிரமாக ஆராய்ந்து எமது மகளைக் கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன். எனது மகளை யாரும் வற்புறுத்தி அடைத்து வைத்துள்ளார்களோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது. சீ.சீ.டி.வி காணொளியில் கூட பாதையைக் கடப்பது மாத்திரமே தெரிகின்றது.
நான் ஒரு முன்னாள் போராளி எனது மகளின் முழு நோக்கமும் படிப்பாகவே இருந்தது. எனது புலம்பெயர் நண்பர்களே அவரின் கல்விக்கு உதவி புரிகின்றார்கள். சாதாரண தரத்தில் 5A சித்திகளுடன் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர். உயர்தரத்திலும் உயிரியல் பாடமே எடுத்தார். தற்போது பரீட்சை எழுதி பெறுபேற்றுக்காகவே காத்திருந்தார். அந்த நிலையில்தான் ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப படிப்பிற்காகவே குறித்த கல்வி நிலையத்தில் சேர்த்தோம். நாங்கள் ஏதும் சொன்னாலும் படிப்பையே அவர் நோக்கமாகக் கொண்டவர். நான் இறுதியாக கல்வி நிலையத்தில் கொண்டு சென்று விடும் போதும் எதுவித பதற்றம் அச்சம் எதுவித மாற்றமான நடத்தைகளோ தென்படவில்லை.
எனது மகளுக்கு என்ன நடந்தது என்ற நிலை அறியாமல் இருப்பதே மிகக் கவலையாக உள்ளது. எங்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் மற்றையது இவர் ஒரே ஒரு பெண்பிள்ளை.
எனது பிள்ளை தொலைபேசி பாவனைகளும் அதிகம் இல்லை. நாங்கள் அறிந்த வகையில் காதல் விவகாரங்கள் என்ற விடயம் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் கூட எங்கள் மனம் கொஞ்சம் ஆறியிருக்கும். இவ்வாறு ஊடக மன்றுக்கு இதனைக் கொண்டு வந்திருக்க மாட்டோம். ஆனால் என்ன நடந்துள்ளது என்பது அறியாததாலேயே எங்களுக்குப் பயம் அதிகரித்துள்ளது.
எனது மகள் என்னை விட துணிச்சலான பிள்ளை தனக்கு தேவையானவற்றைத் தாயிடமே, அம்மம்மாவிடமோ துணிந்து சொல்லக் கூடியவர். நேரடியாக அறிந்தவர்களுக்கு என் மகளைப் பற்றி நன்றாகத் தெரியும் என்று தெரிவித்துள்ளார்கள்.






