சட்டவிரோத கனிம அகழ்வுகளை அரசாங்கம் விரைவுபடுத்துகிறதா? மட்டக்களப்பின் சுற்றுச்சூழல் அழிவுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்!

கனிம அகழ்வு அனுமதிப்பத்திரங்களை விரைவுபடுத்தும் நடவடிக்கைகளின் பின்னணியில் சட்ட நடைமுறைகள் மீறப்படுகின்றனவா என்றும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் மணல் மற்றும் ஏனைய கனிம அகழ்வுகளால் பாரிய சுற்றுச்சூழல் அழிவுகள் ஏற்படுவதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (20) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கேள்வி – பதில் நேரத்தின்போது, நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சரிடம் பல்வேறு முக்கிய கேள்விகளை முன்வைத்த அவர், கனிம அகழ்வு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான சட்ட அடிப்படை, புதிய வழிகாட்டுதல்களின் சட்டபூர்வத்தன்மை மற்றும் அவற்றினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பில் அரசாங்கம் தெளிவான பதில்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

1992 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க சுரங்கங்கள் மற்றும் கனிமப் பொருட்கள் சட்டம் மற்றும் 2009 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க திருத்தச் சட்டம் ஆகியவை நடைமுறையில் இருக்கும்போது, கனிம அகழ்வு அனுமதிப்பத்திரங்களை விரைவுபடுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியின் வழிகாட்டுதல்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பில் அவர் தனது கடுமையான கவலையை வெளிப்படுத்தினார்.

2026 ஜூலை 06 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைவாக, 2026 ஆகஸ்ட் 31 ஆம் திகதியிடப்பட்ட கைத்தொழில் வழிகாட்டுதல் இலக்கம் 01/2026 மூலம் மாவட்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, செப்டெம்பர் 01 முதல் கனிம அகழ்வு அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள் குறித்த குழுக்களுக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டமோ அல்லது சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒழுங்குவிதிகளோ அல்லாத இவ்வாறான வழிகாட்டுதல்களின் அடிப்படையில் அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு உள்ள சட்ட அதிகாரம் என்னவென்றும், இதன் சட்டபூர்வத்தன்மை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

சுற்றுச்சூழல் அழிவுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் காரணமாகப் பல பகுதிகளில் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சாணக்கியன் எம்.பி. குற்றஞ்சாட்டினார்.

இதற்கான ஆதாரங்களாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்களையும் அவர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

மண் உள்ளிட்ட இயற்கை வளங்களை மீளுருவாக்கம் செய்ய முடியாது என்பதால், உரிய தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீடுகள் இன்றி கனிம அகழ்வு அனுமதிப்பத்திரங்களை விரைவுபடுத்துவது எதிர்காலத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்தார்.

“கடந்த காலங்களில் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு எதிராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க என்னுடன் இணைந்து போராடினார். அவர் எனது போராட்டத் தோழராகவும் இருந்தார். ஆனால் இன்று நான் தனியாகப் போராடிக்கொண்டிருக்கின்றேன். இது எனக்கு வேதனையளிக்கின்றது” எனவும் அவர் தனது உரையின்போது தெரிவித்தார்.

அனுமதிப்பத்திர நடைமுறைகளில் முரண்பாடுகள்?

மட்டக்களப்பு மாவட்டத்தில் கனிம அகழ்வு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் முரண்பாடான நடைமுறைகள் காணப்படுவதாகவும் சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.

ஒரு குழுவின் அனுமதியுடன் கனிம அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், நகர சபை அனுமதி கோரும்போது அதனைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும், அதேவேளை தனியார் தரப்பினர் கோரும்போது அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள முடிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கனிம அகழ்வு அனுமதிப்பத்திரங்களுடன் தொடர்புடைய நிபந்தனைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகள், அரசாங்கக் கட்டணங்கள், போக்குவரத்து அனுமதிப்பத்திரங்கள் மற்றும் கண்காணிப்பு நடைமுறைகள் ஆகியவை தளர்த்தப்பட்டுள்ளனவா என்றும், அவ்வாறு தளர்த்தப்பட்டிருந்தால் எந்தச் சட்ட அதிகாரத்தின் கீழ் அவை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் கேள்வி எழுப்பினார்.

மாவட்டக் கண்காணிப்புக் குழுக்களின் பரிந்துரைகள் சுரங்கங்கள் மற்றும் கனிமப் பொருட்கள் பணியகத்தின் பணிப்பாளர் நாயகத்தைக் கட்டுப்படுத்துகின்றனவா, விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள ஏழு நாட்கள் கால அவகாசம் உரிய தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்குப் போதுமானதா என்பன உள்ளிட்ட கேள்விகளையும் அவர் முன்வைத்தார்.

கனிம அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான முழுமையான தரவுகள் கோரிக்கை

2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் மாவட்ட ரீதியாக வழங்கப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட கனிம அகழ்வு அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கை குறித்த முழுமையான தரவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அவர் கோரினார்.

அத்துடன், 2026 செப்டெம்பர் மாதம் முதல் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள், நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மற்றும் அவற்றைச் செயலாக்குவதற்கான சராசரிக் காலம் தொடர்பான தகவல்களையும் வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார்.

விரைவுபடுத்தப்பட்ட அனுமதிப்பத்திர நடைமுறையினால் கனிம வள இருப்புகள் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்றும், அவ்வாய்வு அறிக்கைகளைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமா என்றும் வினவினார்.

இயற்கை மணலுக்குப் பதிலாக தயாரிக்கப்பட்ட மணல் (Manufactured Sand) பயன்படுத்துதல், மாற்றுக் கட்டுமானப் பொருட்களை அறிமுகப்படுத்துதல், கட்டுமானக் கழிவுகளை மீள்சுழற்சி செய்தல் போன்றவற்றின் மூலம் இயற்கைக் கனிம வளங்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான தேசியக் கொள்கை நடைமுறையில் உள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், தற்போதைய அனுமதிப்பத்திர வழங்கும் செயல்முறையை எப்போது சட்டபூர்வமான ஒழுங்குவிதிகளின் கீழ் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் வினவினார்.

சாபி நகர் சம்பவத்திற்கும் நீதி கோரிக்கை

இதன்போது சாபி நகர் சம்பவம் தொடர்பிலும் கருத்துத் தெரிவித்த சாணக்கியன் எம்.பி., குறித்த சம்பவம் இடம்பெற்று நான்கு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் இச்சம்பவம் தொடர்பில் குரல் கொடுத்த தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இன்று மௌனமாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படாமை கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கனிம வளங்களைப் பாதுகாப்பது, சுற்றுச்சூழல் அழிவுகளைத் தடுப்பது, சட்டபூர்வமான நடைமுறைகளின் கீழ் அனுமதிப்பத்திரங்களை வழங்குவது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுப்பது ஆகிய விடயங்களில் அரசாங்கம் உரிய பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதையே தனது பாராளுமன்றக் கேள்விகள் மூலம் சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.