மக்களின் உண்மையான தேவைகள் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளின் குறைபாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும்போது வாக்குகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு கிராமங்கள் தெரிவுசெய்யப்படக்கூடாது என்றும், மக்களின் உண்மையான தேவைகள் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளின் குறைபாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேசத்தின் எல்லைக் கிராமங்களுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களைப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், பொதுவாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்தி அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும்போது, அதிகளவான வாக்குகளைப் பெற்ற பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கும் நிலை காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இதன் காரணமாகக் குறைந்தளவு வாக்குகளைக் கொண்ட கிராமப்புறங்கள் மற்றும் எல்லைக் கிராமங்கள் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, கிராமப்புறங்களில் வாழும் மக்கள் இன்றும் வீதிகள், வடிகாலமைப்பு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் போதியளவில் கிடைக்காத காரணத்தால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

எனவே, எந்தவொரு கிராமத்தையும் அங்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்தியிலிருந்து புறக்கணிக்க முடியாது எனத் தெரிவித்த அவர், மக்களின் உண்மையான தேவைகள் மற்றும் அந்தந்தப் பகுதிகளின் அபிவிருத்தி முன்னுரிமைகளைக் கருத்திற்கொண்டே நிதி ஒதுக்கீடுகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், அனைத்துக் கிராமங்களுக்கும் சமமான அபிவிருத்தி வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதே தமது நோக்கம் எனவும் இரா. சாணக்கியன் எம்.பி. தெரிவித்தார்.

அபிவிருத்தி என்பது வாக்குகளுக்கான சலுகையாக அல்ல; மக்களின் அடிப்படை உரிமைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்யும் நடவடிக்கையாக அமைய வேண்டும் என்பதையே அவரது கருத்து வலியுறுத்துகின்றது.