கல்முனைக் கல்வி வலய அதிபர்களுக்கு பொதுக் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் விழிப்புணர்வுக் கூட்டம்!

நூருல் ஹுதா உமர்

2027ஆம் ஆண்டு முதல் தரம் 2 மற்றும் தரம் 6 மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள பொதுக் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில், கல்முனைக் கல்வி வலயப் பாடசாலைகளின் அதிபர்களைத் தெளிவூட்டும் விழிப்புணர்வுக் கூட்டம் (12.11.2026) கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ். சஹீட் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டு, 2027ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ள பொதுக் கல்வி மறுசீரமைப்பின் முக்கிய அம்சங்கள், அதன் நடைமுறைப்படுத்தல் மற்றும் பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் அதிபர்களுக்கு விரிவான விளக்கங்களை வழங்கினார்.

இதன்போது, புதிய கல்வி மறுசீரமைப்பைச் செயற்படுத்துவதில் அதிபர்களின் பொறுப்புகள், அதற்கான முன் தயாரிப்புகள் மற்றும் பாடசாலை நிர்வாக மட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான என்.வருணியா சாந்தரூபன், எம்.எல்.எம்.முத்தரிஸ், சுரேஷ் செல்வா மற்றும் யூ.எல்.எம்.றியால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

புதிய கல்வி மறுசீரமைப்பை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்குப் பாடசாலை அதிபர்களை முன்கூட்டியே தயார்படுத்தும் நோக்கில் இவ்விழிப்புணர்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.