இகிமிசன் மாபெரும் துறவிக்கு கல்லடியில் மகத்தான வரவேற்பு

( வி.ரி.சகாதேவராஜா)

இராமகிருஷ்ண மிஷன், மட்டக்களப்பு கிளையின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவர் அதிவணக்கத்திற்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ் நேற்று (12) வியாழக்கிழமை இரவு மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிஷனை வந்தடைந்தார்.

அவருக்கு மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் குருகுல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ் தலைமையிலான துறவிகள் பக்தர்கள் பெருவரவேற்பளித்தார்கள்.

அங்கு விசேட ஆராதனை வழிபாடு நடைபெற்றா இறுதியில் பக்தர்கள் பாதநமஸ்காரம் செய்து வழிபட்டனர். சுவாமிகள் ஆசீர்வாதம் வழங்கினார்.

சுவாமிகளுடன் கோணம்பட்டி இராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீயும் வருகை தந்திருந்தார்.

இன்று 14 ஆம் திகதி சனிக்கிழமை
ராமகிருஷ்ண மிஷன் ஆச்சிரமத்தில் காலை 5.15 மணி முதல் மங்கள ஆரத்தி, வேத பாராயணம், கொடியேற்றம், பூஜை, பஜனை, நூற்றாண்டு நினைவுச் சின்னம் திறப்பு, ஹோமம், சொற்பொழிவு என பகல் 12.30 வரை விசேட பூஜை நிகழ்வுகள் நடைபெறும். மாலை 7 மணிக்கு பக்தர்கள் ஆசி பெறலாம்.

நாளை 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரதான விழா
கல்லடி விபுலானந்தா ஞாபகார்த்த மணி மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறும்.
இதில் மங்கல விளக்கேற்றல், வரவேற்பு நடனம், நூற்றாண்டு அறிக்கை, காணொளி, தலைமையுரை, நூற்றாண்டு மலர், முத்திரை, புத்தகங்கள் வெளியீடு மற்றும் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜின் ஆசியுரை இடம்பெறும்.

நவம்பர்
16ஆம் திகதி சிவானந்தா வித்தியாலயத்தில் விஞ்ஞானானந்த பவன் திறப்பு, 17ஆம் திகதி மந்திர தீட்சை நிகழ்வு ராமகிருஷ்ணர் ஆலயத்தில் நடைபெறும்.

அதேவேளை நவம்பர் 20 ஆம் திகதி
கொட்டக்கலை சிவானந்தா நலன்புரி நிலையத்தில் சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறப்பு விழா இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.